சூரரைப் போற்று கோபிநாத்தின் சுவாரஸ்யக் கதை! 1 ரூபாய்க்கு விமான டிக்கெட் விற்ற சூப்பர் கதை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாப்பிரெட்டிப் பட்டி, ஏராகரம், அய்யம்பேட்டை, உசிலம்பட்டி, டி சுப்பலாபுரம், மொடக்குறிச்சி, கொடுமுடி... சென்னைக்கு மிக அருகில் இருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற, தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். இவர்கள் படிப்பை முடித்துவிட்டு, வேலைக்காக சென்னை, கோவை போன்ற பெருநகரங்களை நோக்கி படை எடுக்கும் இளைஞர்கள் தான், தமிழகத்தில் 100-ல் 90 பேர்.

 

அந்த 90 பேரில் நாமும் ஒருவராக இருக்கலாம். நமக்கு சென்னை கோவை போன்ற பிரம்மாண்டமான, பெரு நகரங்கள் எல்லாம், படித்து முடிக்கும் வரை சுற்றுலா தளங்கள் தான்.

சுற்றுலாவாக வந்து போகும் வரை, நமக்கு இந்த நகரங்கள் தரப் போகும் அவமானங்கள், கேலி கிண்டல்கள் மற்றும் வேதனைகளை எப்போதும் வெளிக்காட்டுவதே இல்லை.

பிழைப்பு

பிழைப்பு

கல்லூரி படிப்பை முடித்த பின், வேலை என ஒரு நிறுவனத்தில் சேர்ந்த பின்
"நீ எல்லாம் என்ன மயித்துக்குடா வேலைக்கு வர்ர"
"இதத் தான் உங்க காலேஜ்ல 4 வருஷம் சொல்லிக் கொடுத்தாய்ங்களாடா"
"இந்த சின்ன வேலையைக் கூட செய்யத் தெரியாம நீ எல்லாம் எப்புடி தாண்டா (தாம்மா) டிகிரி முடிச்ச..?"
"ஊர்ல மாடு மேய்க்கிறவன எல்லாம் கொண்டு வந்து என் தலையில கட்றாய்ங்க"
"சார், புதுசா வேலைக்கு வந்த பயலுக்கு (பொண்ணுக்கு) ஒரு எழவும் தெரியல"
... போன்ற பல அவமானங்களை சந்தித்து இருப்போம். பெரு நகரத்தின் மிரட்சி கலந்த பயத்தைக் கடந்து, ஒரு இடத்தில் நம் திறமையை நிருபித்து, அலுவலக அரசியலை எல்லாம் புரிந்து கொண்டு பேர் எடுப்பதற்கே குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகிவிடும்.

பிசினஸ்
 

பிசினஸ்

கிராமங்களில் படித்துவிட்டு, பெரு நகரங்களுக்கு வந்து, ஒரு வேலையில் நம்மை நிலை நிறுத்திக் கொள்ளவே, சுமார் ஒரு வருடம் போராடி, நம்மை நிரூபிக்க வேண்டி இருக்கிறது என்றால், ஒரு பிசினஸில் என்ன மாதிரியான சிக்கல்கள், பிரச்சனைகள், அழுத்தங்கள் எல்லாம் வரும். அதை எல்லாம் நம்மைப் போன்ற ஒரு சராசரி கிராமவாசி சமாளித்து, இன்று ஒரு சாதனையாளனாக வலம் வருகிறார் என்றால் எப்படி இருக்கும். அதுவும் யாருமே செய்யாத ஏர்லைன்ஸ் (விமான சேவை) வியாபாரத்தைச் செய்து பெரிய ஆள் ஆகி இருக்கிறார் என்றால் எப்படி இருக்கும்..? அப்படிப்பட்ட ஒரு கிராமவாசியைத் தான் இன்று பார்க்கப் போகிறோம்.

அவர் பெயர்

அவர் பெயர்

கொருர் ராமசாமி கோபிநாத் (G R Gopinath). இனி சுருக்கமாக அவரை கேப்டன் கோபிநாத் என மரியாதையோடு அழைப்போம். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே கொருர் என்கிற சிறிய கிராமத்தில் தான். கொருர் கிராமம், கர்நாடகத்தின் ஹசன் மாவட்டத்தில் இருக்கிறது. பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு, இந்திய ராணுவ அகாடமியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.

வங்க தேசப் போர்

வங்க தேசப் போர்

இந்திய ராணுவ அகாடமியில் பட்டம் பெற்ற பின், ராணுவத்திலேயே உயர் அதிகாரியாக பணியாற்றத் தொடங்கினார். இந்தியா தலையிட்டு வங்க தேசம் என தனி நாட்டை உருவாக்கிக் கொடுத்த 1971 வங்க தேசப் போரில் நம் கேப்டன் கோபிநாத்தும் போர் செய்து இருக்கிறார். சுமார் எட்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு 30 வயதுக்குள்ளேயே ராணுவத்துக்கு டாட்டா சொல்லிவிட்டாராம்.

சில பல வியாபாரம்

சில பல வியாபாரம்


இந்திய ராணுவத்தில் இருந்து வெளியேறியவர், அடுத்தடுத்து சில பல வியாபாரங்களைச் செய்தார். குறிப்பிட்டு பட்டியல் போட முடியாத அளவுக்கு
கால் நடை வளர்ப்பு,
பால் விற்பது,
கோழிப் பண்ணை,
பட்டுப் புழு வளர்ப்பு,
மோட்டார் சைக்கிள் டீலர்,
உடுப்பி ஹோட்டல் ஓனர்,
பங்கு தரகர் (Stock Broker),
விவசாய நீர் பாசன சாதனங்களை விற்பவர்,
அரசியல்வாதி (சில முறை தேர்தலில் நின்று தோற்று இருக்கிறார்)... என பல ரூபங்களை எடுத்து இருக்கிறார்.

விமான சேவை (ஏர்லைன்ஸ்)

விமான சேவை (ஏர்லைன்ஸ்)

கடைசியில், எந்த ஒரு சாதாரண தனி மனிதரும் தொட யோசிக்கும் விமான சேவைத் துறையைக் கையில் எடுத்தார். ஜே ஆர் டி டாடா போன்ற, இந்தியாவின் பிசினஸ் பிரம்மாக்களாலேயே, நிம்மதியாக தொழில் செய்ய முடியாத சிக்கலான துறை, இந்த விமான சேவைத் துறை. 1932-ல் தொடங்கப்பட்ட டாடா ஏர்லைன்ஸ் 1953-ல் முழு அரசு நிறுவனமானது என்றால், அரசின் தலையீடுகளும், கெடுபிடிகளும் புரியும். ஆனால் இந்த விமான சேவைத் துறை தான் இவர் பெயரை நிலைத்து நிற்க வைத்தது. ஆனால் இந்த பயணத்தில் மூஞ்சி முகரை எல்லாம் பெயரும் அளவுக்கு பலமான அடியும் விழுந்தது. எனவே மக்களே இதற்கு மேல் சீட் பெல்டைப் போட்டுக் கொள்ளுங்கள். இதோ டெக்கன் ஏவியேஷனைத் தொடங்கிவிட்டார் கோபிநாத்.

டெக்கன் ஏவியேஷன்

டெக்கன் ஏவியேஷன்

தன் பழைய ராணுவ நண்பர் சாமுவேல் உடன் இணைந்து ஒரு தனியார் ஏவியேஷன் நிறுவனத்தை 1997-ல் தொடங்கினார். அது தான் டெக்கன் ஏவியேஷன். அடித்துப் பிடித்து பணத்தை தயார் செய்து ஒரு விமானத்தில் தொடங்கியது டெக்கன் ஏவியேஷனின் பயணம். டெக்கன் ஏவியேஷன் மெல்ல இந்தியா முழுக்க பிரபலமடைந்தது. குறிப்பாக அரசியல்வாதிகள் மத்தியில் அநியாயத்துக்கு பிரபலமானார் கோபிநாத். அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சார பயணங்களுக்கு டெக்கன் ஏவியேஷனின் சார்டர்ட் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினர். இன்று வரை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அம்பானிக்கு இவர் தான்

அம்பானிக்கு இவர் தான்

அன்று டெக்கன் ஏவியேஷன் என்கிற பெயரில் தொடங்கிய சார்ட்டர் சேவையை, இன்று டெக்கன் சார்ட்டர்ஸ் என்கிற பெயரில் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறார் கோபிநாத். இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் பெருந் தலைகளான அம்பானி, எஸ்ஸார் குழுமங்களின் ஹெலிகாப்டர்கள் எல்லாம், நம் கோபிநாத்தின் டெக்கன் சார்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தான் இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பத்தாது

பத்தாது

21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், டெக்கன் ஏவியேஷன் நிறுவனத்தின் வழியாக, சார்ட்டர் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை, பெரிய மனிதர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கு மட்டும் இயக்கிக் கொண்டு இருப்பதில் பயன் இல்லை. வேறு என்ன செய்யலாம் என யோசித்தார் கோபிநாத். பயணிகள் விமான சேவையை வழங்கினால் என்ன..? என யோசனையை அடுத்த கியருக்கு தட்டிவிட்டார்.

சவால்கள்

சவால்கள்

2000-ம் ஆண்டுகளில், இந்திய விமான சேவையை, ஒட்டு மொத்த இந்தியர்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நபர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். இந்த குறைவான விமான பயணிகளையும் ஏர் இந்தியாவும், சஹாராவும், ஜெட் ஏர்வேஸும் வளைத்துப் போட்டு வைத்திருந்தார்கள். இவர்களைத் தாண்டி பயணிகள் விமான சேவையில் கால் பதிப்பது எல்லாம் கிட்ட தட்ட நடக்காத காரியம் என கோபிநாத்தின் மண்டையைக் கழுவினார்கள் சுற்றி இருந்தவர்கள்.

கோபிநாத் கணக்கு

கோபிநாத் கணக்கு

எத்தனை பேர் பயமுறுத்தினாலும் கோபிநாத் அசருவதாகத் தெரியவில்லை. "2002-ம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 1.3 கோடி பேர் மட்டுமே விமான சேவையை பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். மீதமுள்ள 99 கோடி இந்தியர்களுக்கு விமான சேவையை வழங்கினால் என்ன..?" என பாயிண்ட் பிடித்தார்.

தெளிவு

தெளிவு

அதே நேரத்தில் "வெறுமனே விமான சேவையைக் கையில் எடுத்தால் வேலைக்கு ஆகாது. ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் போன்ற, (அன்றைய காலத்து) விமான சேவை தாதாக்களோடும் மோதக் கூடாது. அவர்கள் வாடிக்கையாளர்களைப் பிடிப்பதும் என் நோக்கம் அல்ல. ஆனால் வியாபாரம் வளர வேண்டும்" என யோசித்தார். அதற்கு கோபிநாத் எடுத்த முடிவு தான் சிறு நகரங்கள்.

ஏர் இந்தியா ஜெட் ஏர்வேஸ்

ஏர் இந்தியா ஜெட் ஏர்வேஸ்

21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்திய விமான சேவைத் துறையின் ராஜா ராணியாக இருந்த ஏர் இந்தியாவும், ஜெட் ஏர்வேஸும் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களையும், அதன் வாடிக்கையாளர்களையுமே குறி வைத்து வியாபாரம் செய்து வந்தார்கள்.மற்ற நகரங்களில் கடை விரிப்பதைப் பற்றி அதிகம் கவனம் செலுத்தவில்லை.

கோபிநாத் ஸ்ட்ராட்டஜி

கோபிநாத் ஸ்ட்ராட்டஜி

ஆனால் நம் கேப்டன் கோபிநாத்தோ தன் வியாபாரத்தை குலு மணாலி, தரம் சாலா, பெல்லாரி, ஜபல்பூர், ராஜமுந்திரி, விஜயவாடா போன்ற இந்தியாவின் டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்கள் பக்கம் வண்டியைத் திருப்பினார். அந்த காலத்தில், இந்த நகரங்களுக்கு எல்லாம் விமான சேவையே கிடையாது.

செலவை எப்படி குறைப்பது

செலவை எப்படி குறைப்பது

கோபிநாத்தின் முன் இருந்த அடுத்த சிக்கல் மலிவு விலையில் விமான கட்டணங்களை வசூலிப்பது. சுருக்கமாக செலவை எப்படி குறைப்பது என யோசித்தார். LCC என்று சொல்லப்படும் Low Cost Carrier ரக சேவைகளை வழங்கத் தயாரானார். கணிசமான அளவுக்கு விமான கட்டணங்கள் செலவு குறைந்தது.

LCC என்றால் என்ன

LCC என்றால் என்ன

விமானத்தில் Full Service Carrier என்றால் விமானத்திலேயே பொழுது போக்கு, உணவு, மது பானங்கள் போன்ற பல வசதிகளைச் செய்து தருவார்கள். LCC என்றால் இந்த வசதிகள் எல்லாம் இருக்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். நம் கேப்டன் கோபிநாத் இந்த இரண்டாவது ரக விமானங்களை களம் இறக்கினார். செலவு தானாக குறைந்தது.

இன்றைய நிலை

இன்றைய நிலை

இன்று ஒட்டு மொத்த இந்தியாவின் விமான சேவைகளைப் பார்த்தால் சுமார் 65 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் கோபிநாத்தின் ஐடியாவில் இந்தியாவுக்குள் வந்த LCC விமானங்கள் தான். 2003-ல் டெக்கன் ஏவியேஷன் LCC விமானங்களை களம் இறக்கி காசு பார்க்கத் தொடங்கிய பின் தான், ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், இண்டிகோ போன்ற விமான சேவை நிறுவனங்கள் அதே LCC ஃபார்முலாவை வைத்து வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். அந்த அளவுக்கு கேப்டன் கோபிநாத்தின் தாக்கம் இன்று வரை இந்திய விமான சேவைகளில் பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறது.

டிக்கெட் விலை

டிக்கெட் விலை

சரி இந்த ஊர்களுக்கு எல்லாம் விமான சேவையைத் தொடங்கலாம், செலவுகளை குறைக்க LCC ரக விமான சேவைகளும் ரெடி. ஆனால் வாடிக்கையாளர்களை எப்படிக் கவர்வது... போட்றா ஆஃபர...
"ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட்"
என ஒரு அதிரடி சலுகை கொடுத்து, குறைந்த விலையில் விமானத்தில் பறக்கலாம் என ஒட்டு மொத்த இந்தியாவையும் அன்னாந்து தன் டெக்கன் ஏவியேஷன் விமானத்தைப் பார்க்க வைத்தார். அந்த காலத்து ஜாம்பவான்களான ஏர் இந்தியா, சஹாரா, ஜெட் ஏர்வேஸ் எல்லாம் வாய் அடைத்துப் போனார்கள்.

சந்தை காலி

சந்தை காலி

2003-ல் தொடங்கப்பட்ட கேப்டன் கோபிநாத்தின் ஏர் டெக்கன் நிறுவனம், அடுத்த 3 - 4 ஆண்டு காலத்தில், இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸை தூக்கிச் சாப்பிட்டது. அந்த நேரத்தில் இந்தியாவில் சுமார் 67 நகரங்களுக்கு, தன் விமானங்களை இயக்கிக் கொண்டு இருந்தது ஏர் டெக்கன். ஒரு கட்டத்தில் ஏர் டெக்கன் நிறுவனத்தில் ஒரு ரூபாய் டிக்கெட் பெறுவது எப்படி என சாதாரண வெகு ஜன மக்கள் கேட்கும் அளவுக்கு பிரபலமாக வளர்ந்தது. இதெல்லாம் ஓகே தான் ஆனால் லாபம்..?

நிதி நிலை

நிதி நிலை

ஒரு ரூபாய்க்கு விமான சேவை, அதிரடியாக 3 - 4 ஆண்டுகளில் இந்தியாவின் 67 நகரங்களில் விமான சேவை தொடக்கம் என ஒரு போருக்கு நிகராக அதி வேகமாக, தன் டெக்கன் ஏவியேஷன் வியாபாரத்தை நடத்திக் கொண்டு இருந்தார் கேப்டன் கோபிநாத். டெக்கன் ஏவியேஷன் இயக்குநர் குழுவும், நிறுவனத்தின் நிதி நிலையும் கேப்டன் கோபிநாத்தின் அதிரடிக்கு முட்டுக் கட்டைப் போட்டார்கள். குறிப்பாக கடன் கொடுத்தவர்கள், முதலீடு செய்தவர்கள் எல்லாம் லாபம் இல்லை என கடுப்பாகத் தொடங்கினார்கள்.

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

அதே நேரத்தில், மேற்கொண்டு டெக்கன் ஏவியேஷன் நிறுவனத்தில் முதலீடு செய்ய, பங்குச் சந்தை வழியாக நிதி திரட்டினார்கள். டெக்கன் ஏவியேஷன் என்கிற பெயரில் பங்குகள் வெளியிடப்பட்டது. இப்படி பங்குச் சந்தை வழியாக நிதி திரட்டியவர்கள், தங்கள் நிதி நிலையை ஒவ்வொரு காலாண்டுக்கும் முறையாக பங்குச் சந்தைகளுக்கும், முதலீட்டாளர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். இந்த விதியினால் டெக்கன் ஏவியேஷன் நிறுவனத்தின் நஷ்டங்கள் அப்பட்டமாக பொது மக்களுக்குத் தெரிய வந்தது.

மல்லையா

மல்லையா

என்ன செய்ய என யோசித்துக் கொண்டு இருந்த போது தான், 2007-ம் ஆண்டில் நம் கிங் ஃபிஷ்ஷர் புகழ் விஜய் மல்லையா டெக்கன் ஏவியேஷனின் 26 சதவிகித பங்குகளை வாங்கினார். 2007 - 08-ம் ஆண்டு வாக்கில் டெக்கன் ஏவியேஷன் மற்றும் கிங் ஃபிஷ்ஷர் ஏர்லைன்ஸ், முழுமையாக இணைக்கப்பட்டது. கிங் ஃபிஷ்ஷர் மெல்ல ஆட்டம் கண்டு கடைசியில் கடையை மூடியது. அதோடு விஜய் மல்லையாவும் லண்டனுக்கு தப்பிச் சென்றது எல்லாம் தனிக் கதை. மீண்டும் கேப்டன் கோபிநாத் கதைக்கு வருவோம்.

கேப்டனா கொக்கா..?

கேப்டனா கொக்கா..?

டெக்கன் ஏவியேஷனை, கிங் ஃபிஷ்ஷருக்கு விற்கும் போது, சார்ட்டர் சேவைகளை மட்டும் பிரித்து, டெக்கன் சார்ட்டர்ஸ் லிமிடெட் என்கிற பெயரில் தனி நிறுவனமாக தொடங்கிவிட்டார். அன்றில் இருந்து இன்று வரை டெக்கன் சார்ட்டர்ஸ் சிறப்பாக செயல்பட்டு ஓரளவுக்கு லாபமும் ஈட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

அடுத்த சோதனை

அடுத்த சோதனை

டெக்கன் ஏவியேஷனை விற்று வந்த பணத்தில் டெக்கன் 360 என ஒரு சரக்கு விமான சேவை நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனமும் நிதி நிலை மோசமாகி நொடிந்து போனது. அதன் பிறகு டெக்கன் ஷட்டில் என்கிற பெயரில் குஜராத்தின் அஹமதாபாத், சூரத், ஜாம்நகர், பாவ்நகர் கந்த்லா போன்ற நகரங்களுக்கு சார்ட்டர் விமானம் இயக்கினார். அந்த வியாபாரமும் ஊத்தி முழுகியது.

திரும்பி வந்த கேப்டன்

திரும்பி வந்த கேப்டன்

இந்த சோதனைகள் எல்லாம் தாண்டி, கடந்த 2017-ம் ஆண்டு, மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், இந்திய நகரங்களை, விமான வழித் தடங்கள் வழியாக இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் 34 வழித் தடங்களில் விமானங்களை இயக்க அனுமதி பெற்று, மீண்டும் கபாலியாய் களத்தில் இறங்கி இருக்கிறார் கேப்டன் கோபிநாத். இந்த முறை ஏர் டெக்கன் என்கிற பெயரில் செயல்படத் துவங்கி இருக்கிறார்கள்.

தற்போதைய நிலை

தற்போதைய நிலை

இன்று வரை, கோடீஸ்வரர்கள் & பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே புழங்கும், இந்திய விமான சேவை வியாபாரத்தில், ஒரு குக்கிராம வாசியாக வந்து, தன் கால் தடத்தை அழுத்தமாக பதித்துக் கொண்டு இருக்கும் நம் கேப்டன் கோபிநாத்-க்கு ஒரு ராயல் சல்யூட்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who is soorarai pottru G R Gopinath

Who is soorarai pottru G R Gopinath. What he did in his life time and what he achieved in airlines business.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X