டெல்லி: யெஸ் பேங்கில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்கிற பகீர் தகவலை எல்லோரும் பார்த்து இருப்போம்.
இந்த தகவலுக்குப் பின், யெஸ் பேங்கில் என்ன பிரச்சனை, யெஸ் பேங்க் ரானா கபூர் என்ன செய்தார் போன்றவைகளையும் பார்த்து இருப்போம்.
ஆனால் இப்போது யெஸ் பேங்கின் ரானா கபூர் சர்ச்சையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் பெயர்களும் அடிபடத் தொடங்கி இருக்கின்றன.

அமித் மால்வியா
பாரதிய ஜனதா கட்சியின் ஐடி செல் தலைவராக இருக்கும் அமித் மால்வியாம், தன் ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸைக் குறித்து ஒரு பதிவைப் போட்டு அதகளப்படுத்தி இருக்கிறார். "இந்தியாவில் அனைத்து நிதி சார்ந்த குற்றங்களுக்கும் காந்தி குடும்பத்தினருடன் ஒரு ஆழமான தொடர்பு இருக்கிறது." என ட்விட் செய்து இருந்தார்.

விஜய் மல்லையா
மேலும் "இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய விஜய் மல்லையா, சோனியா காந்திக்கு விமான பயண டிக்கெட்டுகளை அனுப்பினார். விஜய் மல்லையாவுக்கு மன் மோகன் சிங் மற்றும் ப சிதம்பரத்துடன் தொடர்பு இருந்தது. இப்போது விஜய் மல்லையாவைக் காணவில்லை." என வெளுத்து வாங்கி இருக்கிறார்.
நிரவ் மோடி
பஞ்சாப் நேஷனல் பேங்கில் சுமாராக 13,000 கோடி ரூபாய் மோசடி செய்த நிரவ் மோடியின், திருமண நகைகள் கடையை, முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தான் திறந்து வைத்தார். நிரவ் மோடி வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தவில்லை என இன்னொரு உதாரணத்தைச் சொல்லி தாக்கி இருக்கிறார் அமித் மால்வியா.

ப்ரியங்கா வதெரா
அதோடு நின்று இருந்தால் கூட பரவாயில்லை. மனிதர் ப்ரியங்கா காந்தி வதேராவையும் ஒரண்டைக்கு இழுத்து இருக்கிறார். தன் முதல் ட்விட்டின் கடைசி வரியாக "யெஸ் பேங்கின் ரானா கபூர், ப்ரியங்கா வதேராவிடம் இருந்து ஓவியங்களை வாங்கினார்" எனச் சொல்லி இருக்கிறார் அமித் மால்வியா.
ஓவியம்
அதன் பிறகு இன்னொரு ட்விட்டில் "ப்ரியங்கா வதேரா, தனக்குச் சொந்தம் இல்லாத ஒரு ஓவியத்தை, யெஸ் பேங்கின் முன்னாள் தலைவர் ரானா கபூருக்கு 2 கோடி ரூபாய்க்கு விற்று இருக்கிறார். இதற்கு எல்லாம் ஒரு தனி திறமை வேண்டும்" என ட்விட்டி இருக்கிறார் அமித் மால்வியா.

பதில்
இந்த டிவிட்களுக்கு பதில் கொடுக்கும் விதத்தில் "எம் எஃப் ஹுசேன் வரைந்த ராஜிவ் காந்தி ஓவியத்தை, கடந்த 2010-ம் ஆண்டு, சுமார் 2 கோடி ரூபாய்க்கு, யெஸ் பேங்கின் முன்னாள் தலைவர் ரானா கபூருக்கு, காந்தி குடும்பம் விற்றது உண்மை தான்" எனச் சொல்லி இருக்கிறார் காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் சிங்க்வி.

இதற்கு மேலும் வேண்டுமா?
அதோடு, யெஸ் பேங்கின் தலைவர் ரானா கபூரிடம் விற்ற ஓவியத்துக்கான பணம் (2 கோடி ரூபாய்) முழுவதும் காசோலையாகத் தான் வாங்கி இருக்கிறார் ப்ரியங்கா. அதோடு வருமான வரிப் படிவத்திலும் ப்ரியங்கா வதேரா அந்த பணத்தைக் காட்டி இருக்கிறார். இதற்கு மேல் என்ன வெளிப்படைத்தன்மை வேண்டும் என அமித் மால்வியாவைப் பார்த்து கேள்வி எழுப்பி இருக்கிறார் அபிஷேக் சிங்வி.