இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சோமோட்டோ மார்ச் காலாண்டில் மட்டும் தனது உணவு டெலிவரி வர்த்தகத்தைப் புதிதாக 300 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்துள்ளது.
இதன் மூலம் சோமேட்டோவின் மொத்த வர்த்தக நகரங்களின் எண்ணிக்கை 1000த்திற்கும் அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் Blinkit நிறுவன கைப்பற்றலுக்கான இறுதி முடிவு ஜூன் 17ஆம் தேதி எடுக்கப்பட உள்ளது.
ரிலையன்ஸ்-ன் புதிய சேவை.. பட்டனை தண்டினால் இன்ஸ்டென்ட் டெலிவரி..!

சோமேட்டோ
இந்திய டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் இருக்கும் இன்றைய வர்த்தகப் போட்டிக்கு சோமேட்டோ நிறுவனத்தில் இருக்கும் உணவு வர்த்தகம் மட்டும் போதாது என்பதை உணர்ந்து, பல முயற்சிகள், முதலீடுகளுக்கு பின்பு சோமேட்டோ Blinkit நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு செய்தது.

Blinkit கைப்பற்றல்
இந்நிலையில் ஜூன் 17 ஆம் தேதி சோமேட்டோ நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூடுகிறது. இக்கூட்டத்தில் Blinkit நிறுவனத்தைக் கைப்பற்றுவது குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும், இக்கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்தால் பிளிங்க்இட் நிறுவனம் மொத்தமும் சோமேட்டோ கட்டுப்பாட்டிற்குள் வரும்.

700 மில்லியன் டாலர் மதிப்பீடு
சோமேட்டோ மற்றும் பிளிங்க்இட் கைப்பற்ற பேச்சுவார்த்தையில் முதல்கட்டமாக 700 மில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டது, ஆனால் தற்போது 1 சோமேட்டோ பங்குகளுக்கு 10 Blinkit பங்குகளை அளிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் பணப் பரிமாற்ற அளவுகள் மாறுபடும்.

போட்டி
சோமேட்டோ நிறுவனத்திற்குப் பிளிங்க்இட் என்பது மிகவும் முக்கியமானது, ஏற்கனவே ஸ்விக்கி, டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் கடுமையாகப் போட்டியை உருவாக்கியுள்ள நிலையில் சோமேட்டோ கூடுதலாக வர்த்தகத்தைப் பெறவும் மிகவும் அவசியமாக உள்ளது. பிளிங்க்இட் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றினால் சோமேட்டோ இந்தச் சேவையை 1000 நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய முடியும்.

சோமேட்டோ பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் சோமேட்டோ நிறுவன பங்குகள் 3.12 சதவீதம் சரிந்து 69.85 ரூபாயாக உள்ளது. சோமேட்டோ பங்குகள் அதிகப்படியாக 169.10 ரூபாயும், குறைவாக 50.35 ரூபாயாகவும் உள்ளது. Blinkit கைப்பற்றல் முடிவின் மூலம் சோமேட்டோ பங்குகள் பெரிய அளவில் உயரலாம்.