கேன்சர் உள்ளவர்களுக்குக் குறைந்த ப்ரீமியத்தில் நிறைந்த பாதுகாப்பு அளிக்கும் எல்ஐஸி பாலிஸி...!

Written By: Staff
Subscribe to GoodReturns Tamil

கேன்சர் என்ற நோய் சில ஆண்டுகளுக்கு முன்னர்த் தான் கண்டறியப்பட்டது. ஆனால், இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் கேன்சரால் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையை இழக்கும் துரதிர்ஷ்ட நிலை ஏற்பட்டுள்ளதைக் காண்கிறோம். அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் போன்றவை கேன்சர் நோய்க்கு வழி வகுக்கின்றன என்பது நிபுணர்கள் கருத்து. இந்த உயிர்க்கொல்லி நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து விட்டால், மருத்துவ முறைகளின் மூலம் 100 சதவீதம் குணமாக்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போது, இந்நோய்க்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படையாகத் தென்படுவதில்லை. பெரும்பாலும், இந்நோய் மூன்றாம் கட்டத்தை நெருங்குகையில் தான் கண்டறியப்படுகிறது. அந்நிலையில், இந்த நோய்க்கான சிகிச்சைக்குப் பல லட்சம் ரூபாய்ச் செலவாகும். கேன்சருக்கான சிகிச்சைக்குச் செலவாகக்கூடிய அதிகத் தொகையைக் கருத்தில் கொண்டு அரசு சார்ந்த நிறுவனமான லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐஸி) நிறுவனம் எல்ஐஸி கேன்சர் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை (திட்டம் 905) அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் காணப்படும் அனுகூலங்கள் மற்றும் பயன்கள் பற்றி நாம் விரிவாகப் பார்க்கலாம்.

கேன்சருக்கு மட்டுமே

எல்ஐசி கேன்சர் கவர் பாலிஸி கேன்சர் நோயாளிகளுக்கு மட்டுமேயான பிரத்யேகத் திட்டமாகும். இத்திட்டத்தில், கேன்சர் சிகிச்சைக்கென ஒருமுறை மட்டும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது. இது ஒரு வழக்கமான (நான்-லிங்க்ட்) பாலிஸி ஆகும். ஏனெனில், வருடத்துக்கு ஒருமுறை ப்ரீமியம் தொகை செலுத்தி, ஒவ்வொரு வருடமும் இதனைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒழுங்காகப் புதுப்பித்து வந்தால் மட்டுமே காப்பீடு ரீடெயின் செய்யப்படும்.

தகுதி, காப்பீடு

20 வயது முதல் 65 வயது வரையிலானவர்கள் இந்தப் பாலிஸியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பாலிஸிக்கான குறைந்தபட்ச காலவரையறை 10 வருடங்களாகவும், அதிகபட்ச வரையறை 30 வருடங்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 50 வயதுக்குட்பட்டவர் எவருக்கும் இந்நிர்ணயம் பொருந்தும். 65 வயதுடைய ஒருவர் இப்பாலிஸியை எடுப்பாரானால் அவருக்கான காப்பீடு சுமார் 10 வருடங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 75 வயதிற்குப் பின் காப்பீடு கிடையாது. ஒருவர் தன் 55-வது வயதில், இப்பாலிஸியை எடுப்பாரானால், அவர் தன் 75-வது வயது வரையிலான அடுத்த 20 வருடங்களுக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தபட்சமாகச் சுமார் 10 லட்சம் ரூபாயையும், அதிகபட்சமாகச் சுமார் 50 லட்சம் ரூபாயையும் காப்பீட்டுத் தொகையாகப் பெறலாம்.

ப்ரீமியம்

ப்ரீமியம் தொகையானது உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையைப் பொறுத்து மாறுபடும். முதல் ஐந்து வருடங்களுக்கு ப்ரீமியம் தொகையில் மாற்றம் ஏதும் இருக்காது. கோரப்பட்ட தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் எல்ஐஸி நிறுவனம் ப்ரீமியம் தொகையில் மாற்றம் செய்யக்கூடும். குறைந்தபட்ச வருடாந்தர ப்ரீமியம் தொகை சுமார் 2,400 ரூபாய் ஆகும்.

2 காப்பீட்டு ஆப்ஷன்கள்

லெவல் சம் இன்ஷியூர்டு என்பது இதில் ஒன்று. அதாவது, பாலிஸி காலம் முழுவதிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை மாறாது. மற்றொரு ஆப்ஷன் இன்க்ரீஸ்டு சம் இன்ஷியூர்டு என்பதாகும். அதாவது, வருடத்துக்கு ஒருமுறை, உறுதியளிக்கப்பட்ட தொகை உயர்ந்து கொண்டே இருக்கும். பாலிஸி எடுக்கப்பட்ட வருடத்திலிருந்து, ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற விகிதத்தில் சுமார் ஐந்து வருடங்கள் வரை இந்தத் தொகை உயர்ந்து கொண்டே இருக்கும். அல்லது பாலிஸிதாரர் கேன்சர் நோயினால் பாதிக்கப்படும் வரை அதிகரித்துக் கொண்டிருக்கும்.

இதில், எது முதலில் நேர்கிறதோ, அது கருத்தில் கொள்ளப்படும். உதாரணமாக, பாலிஸிதார் கேன்சர் நோயினால் பாதிக்கப்படாதிருப்பின், இத்தொகை வருடத்திற்கு 10 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்து ஐந்து ஆண்டுகளின் முடிவில் சுமார் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கும். ப்ரீமியம் செலுத்தப்படும் காலத்தின் நான்காவது ஆண்டின் போது பாலிஸிதாரர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், காப்பீட்டுத் தொகை அதிகரிப்பது நின்று விடும். இவற்றுள் எது முதலில் நேர்கிறதோ, அதுவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

 

அனுகூலங்கள்

இப்பாலிஸி, கேன்சர் நோயினால் உண்டாகும் ரிஸ்க்கை கவர் செய்வதற்கெனவே உருவாக்கப்பட்டதாகும். பாலிஸி காலககட்டத்தின் போது, பாலிஸிதாரர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டால், இந்தக் காப்பீடு அவருக்கு வழங்கப்படும். பாலிஸிக்கான காலவரையறை முடிந்தபின், எத்தகைய காப்பீடும் வழங்கப்படாது. பாலிஸியை இடையில் சரண்டர் செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை. ரிட்டர்ன்களுக்கு மதிப்பு இல்லாததினால், கடன் வசதியும் கிடையாது.

ஆரம்பக் கட்ட கேன்சர்

கேன்சர் நோய் அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டால், உத்தரவாதமளிக்கப்பட்ட மொத்தத் தொகையில் சுமார் 25 சதவீதம் பாலிஸிதாரருக்கு வழங்கப்படும். ஆரம்ப நிலையிலேயே கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டால், மூன்று வருடங்களுக்கு ப்ரீமியம் தொகை செலுத்த தேவையில்லை. மூன்று வருடங்களுக்குப் பிறகு, வருடாந்தர அடிப்படையில் ப்ரீமியம் தொகை சீராகச் செலுத்தப்பட வேண்டும். ஆரம்பக் கட்ட கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டுக் காப்பீடு வழங்கப்பட்ட பின், மீதமுள்ள பாலிஸி காலத்தில், முற்றிய நிலை கேன்சருக்கு மட்டும் காப்பீடு வழங்கப்படும். ஆரம்பக் கட்ட கேன்சருக்கு இரண்டாவது முறையாகக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை. ஆரம்ப நிலையில் இருக்கக்கூடிய கேன்சர் கட்டி, பாலிஸிதாரருடைய உடலில் முன்பிருந்த இடத்திலன்றி வேறொரு பாகத்தில் காணப்பட்டாலும் கூட அதற்குக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை.

முற்றிய நிலை கேன்சர்

கேன்சர் நோய் முற்றிய நிலையை எட்டிய பின் கண்டறியப்படும் பட்சத்தில், இதற்கு முன் ஆரம்பக் கட்ட கேன்சருக்கு ஏதேனும் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருப்பின், காப்பீடாக வழங்கப்பட வேண்டிய மொத்தத் தொகையில் இருந்து அத்தொகை கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை வழங்கப்படும். கேன்சர் நோய் முற்றிய கட்டத்தில் இருக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டால், உத்தரவாதமாக வழங்கப்பட வேண்டிய தொகையுடன் மொத்தத் தொகையில் ஒரு சதவீதத் தொகையும் சேர்த்து ஒவ்வொரு மாதமும், அடுத்து வரும் பத்தாண்டுகள் வரை வழங்கப்படும். பாலிஸி காலவரையறை இதனைப் பாதிக்காது. பாலிஸிதாரர் இந்நோய்க்கு பலியானாலும் கூட, இந்த மாதாந்திர ஊதியம் அவரது வாரிசுதாரர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும்.

பாலிஸி காலத்தின் போது முற்றிய நிலையில் கேன்சர் நோய் கண்டுபிடிக்கப்பட்டால், கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டிற்குப் பின் வரும் அடுத்த ஆண்டிற்கான ப்ரீமியம் தொகையைச் செலுத்த தேவையில்லை. முற்றிய நிலை கேன்சருக்கெனக் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட பின், மாதாந்திர ஊதியத் தொகை தவிர்த்து, வேறு தொகை எதுவும் வழங்கப்பட மாட்டா. பல்வேறு கேன்சர் கட்டிகள் ஒரே சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, எல்ஐஸி ஒரே ஒரு உதவித்தொகையை மட்டுமே வழங்கும். கேன்சர் எந்தக் கட்டத்தில் இருந்தாலும் இத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வரிச் சலுகை

கேன்சர் கவர் பாலிஸிக்கு, வருமான வரி சட்டத்தின் செக்ஷன் 80 டி -யின் கீழ், வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாகச் சுமார் 55,000 ரூபாய் வரையிலான தொகைக்கு மட்டுமே. இப்பாலிஸியின் கீழ் செலுத்தப்படும் ப்ரீமியம் தொகைக்குச் செக்ஷன் 80 டி -யின் கீழ் வரிச்சலுகை கோர இயலாது.

விதிவிலக்குகள்

பினைன் ட்யூமர்கள், உயிருக்கு பாதிப்பில்லத கேன்சர் கட்டிகள், ஆபத்து அதிகமில்லாத கேன்சர் கட்டிகள் போன்றவை ஆரம்பக் கட்ட கேன்சரின் கீழ் சேர்க்கப்படுவதில்லை. டிஸ்ப்ளேஸியா, இன்ட்ரா-எபித்தீலியல் நியோப்ளேஸியா அல்லது ஸ்குவாமஸ் இன்ட்ராஎபித்தீலியல் லீஜியன்ஸ், கார்ஸினோமா இன்ஸிட்டு, மெலனோமா இன்ஸிட்டு உள்ளிட்ட அனைத்து வகையான ட்யூமர்கள் மற்றும் ஹெச்ஐவி பாதிப்பு போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

காத்திருப்புக் காலம்

பாலிஸி வழங்கப்பட்ட தினத்திலிருந்து 180 நாட்கள் வரையிலான காலம், காப்பீட்டுக்கான காத்திருப்புக் காலமாகக் கூறப்படுகிறது. அல்லது காப்பீடு புதிப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதம் வரை இது எஃபக்டிவ் ஆக இருக்கும். இச்சூழலில், மேற்கூறிய இரண்டில் எது ஒன்று பிற்பாடு நேர்கிறதோ, அதுவே காப்பீடு வழங்கப்படும் போது கருத்தில் கொள்ளப்படும். இந்த விதி கேன்சர் நோய் எப்படிப்பட்ட கட்டத்தில் இருந்தாலும் பொருந்தும். காத்திருப்புக் காலத்தின் போது, காப்பீட்டுத் தொகை வழங்கப்பட மாட்டாது. மேலும், இக்காலகட்டத்தின் போது கேன்சர் எந்தக் கட்டத்தில் இருந்தாலும் கூட, பாலிஸி கேன்சல் செய்யப்படுவதற்கான வாய்ப்பும் உண்டு. காத்திருப்புக் காலம் முடிவடைந்த பின்னர்க் கேன்சர் நோய் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே காப்பீட்டுத் தொகையாக உத்தரவாதமளிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.

நோயாளி பிழைத்திருந்தால் மட்டுமே காப்பீடு

கேன்சர் நோய் ஆரம்பக் கட்ட நிலையில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பின் சுமார் ஏழு நாட்கள் வரை உயிரோடிருந்தால் மட்டுமே காப்பீட்டின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட தொகை வழங்கப்படும். இந்த ஏழு-நாட்கள் காலக்கெடு கேன்சர் நோய் கண்டறியப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படும்.

தள்ளூபடி

இந்தப் பாலிஸியை ஆன்லைனில் வாங்க முடியும். இவ்வகையில் வாங்கினால், ப்ரீமியம் தொகைக்குச் சுமார் ஏழு சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

முழுத் தொகை

முற்றிய நிலையில் கேன்சர் கண்டறியப்பட்டால், உத்தரவாதமளிக்கப்பட்ட முழுத்தொகையும் வழங்கப்பட்ட பின் மாதாந்திர ஊதியத் தொகையும் வழங்கப்படும் என்பது இதன் வசீகரமான அம்சமாகத் திகழ்கிறது.

ப்ரீமியம் தொகை அதிகரிப்பு

ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ப்ரீமியம் தொகை அதிகரிக்கலாம். கோரப்படும் காப்பீட்டுத் தொகையைப் பொறுத்து எல்ஐஸி சில மாற்றங்களைச் செய்யலாம். இதனை விரும்பாதோர், பாலிஸியை புதுப்பிக்கத் தேவையில்லை.

விதிகள்

இப்பாலிஸியை மூன்றாம் நபர் யாரும் நிர்வகிப்பதில்லை. எனவே கோரிக்கைகளை ப்ராசஸ் செய்வது மிகவும் கடினம்.

இந்தத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள விதிவிலக்குகள், அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் உள்ளன. மேலும், குடும்ப உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் எதுவும் கிடையாது. தேவை ஏற்படும்போது, இதன் பயனை பாலிஸிதாரர் மட்டுமே உபயோகித்துக் கொள்ள முடியும்.

 

முக்கியக் குறிப்பு

சாதாரண இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சிலவும் கேன்சர் கவரேஜ் பாலிஸிக்களை வழங்கி வருகின்றன. எல்ஐஸி கேன்சர் கவரேஜ் பாலிஸி எடுப்பதற்கு முன், இதர பாலிஸிக்கள் அனைத்தையும் எடை போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC policy that protects you from cancer in less premium, more protection

LIC policy that protects you from cancer in less premium, more protection
Story first published: Thursday, January 11, 2018, 16:49 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns