மாதம் ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க.. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

Written By:
Subscribe to GoodReturns Tamil

மாத்திற்கு ஒரே ஒருமுறை மட்டும் உங்களுடைய வழக்கமான செயல்பாடுகளில் இருந்து இந்த ஏழு விசயங்களைத் தவிர்த்தால் நீங்கள் 1.3 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம்.

ஒரே குழப்பமாக உள்ளதா? கவலைப்படாதீர்கள்! உங்களுடைய பொழுது போக்கிற்கு நாங்கள் தடை சொல்லப் போவதில்லை. நீங்கள் எப்பொழுதும் போல உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்யலாம். நாங்கள் சொல்லப் போகிற சின்னச் சின்ன விசயங்கள் உங்களுடைய பொருளாதார நடவடிக்கைகளில் ஒரு ஒழுங்குமுறைகளைக் கொண்டு வருவதோடு உங்களுடைய குழந்தைகளுக்குப் பணத்தின் மதிப்பை உணர்த்தி அவர்களைப் பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவதற்கும் உதவும். நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கு மட்டும் அல்ல, உங்களுடைய குடும்பத்தில் ஏற்படும் எதிர்பாராத சிக்கல்களைத் தீர்க்கவும், எதிர்கால இலக்குகளை அடையவும் உதவிக்கரமாக இருக்கும்.

கூட்டிக் கழிச்சுப் பாருங்க…. கணக்கு சரியா இருக்கும் !

ஒரு மாதத்தில் பலமுறை நம்முடைய குடும்பத்தோடு திரைப்படத்திற்குச் செல்வதற்கும் அல்லது நண்பர்களுடன் ஓட்டலுக்குச் செல்வதற்கும் வாய்ப்புகள் ஏற்படும். ஒவ்வொரு வாரமும் இப்படி எதாவது ஒரு செலவு செய்ய நேர்கிறது என்றால், ஒரு மாதத்தில் ஏதாவது ஒரு வாரத்தில் இது போன்ற செலவுகளைச் செய்வதைத் தவிர்த்திடுங்கள். மாதம் ஒரு முறை இப்படிச் சேமிக்கப்படும் தொகை இருபது வருடத்தில் ஒரு பெரும் தொகையாக உயர்ந்துவிடும்.

இதைச் சாத்தியமாக்க வேண்டும் என்றால், இவ்வாறு ஒவ்வொரு மாதமும் சேமிக்கும் தொகையை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபன்ட்டில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் முறையாக நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் தொகை, கூட்டுக் கணக்கீட்டு முறையின் நன்மையினால் பெரும் தொகையாக உயர்ந்து நமக்குப் பலன் தரும்.

ஒரு கணக்கீட்டிற்காக, நம்முடைய முதலீட்டிற்கு 15 சதவிகித வருமானம் கிடைக்கும் என வைத்துக் கொண்டால், 20 வருட காலத்திற்கு எந்த அளவுக்கு வருமான உயர்வு இருக்கும் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபன்டின் மீதான முதலீடு பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது என்றாலும் நீண்ட கால அடிப்படையில் யோசிக்கையில் நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சரி இது போன்று ஒவ்வொரு மாதமும் எந்தெந்த செயல்களைத் தவிர்த்தால் நம்முடைய செல்வ வளம் பெருகும் என்பதை இனி காண்போம்.

 

1. மாதத்தில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை உங்கள் காரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்

மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தால், உங்கள் உடம்புக்கும் மனதுக்கும் ஓய்வு கிடைப்பதோடு, எதிர்காலத்திற்கும் நன்மை பிறக்கும். ஞாயிற்றுக் கிழமை குடும்பத்தோடு வெளியில் செல்வதைத் தவிர்த்தால் ஏறக்குறைய ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். இது போன்று ஒவ்வொரு மாதமும் சேமிப்பாகும் பணத்தை மியூச்சுவல் ஃபன்டில் முதலீடு செய்தால் 20 வருடத்தில் 15 இலட்சம் ரூபாய் சேர்ந்துவிடும்.

2. மாதத்தில் ஒரு முறை காரில் அலுவலகம் செல்வதைத் தவிர்க்கவும்

மாதத்திற்கு ஒரு முறை காரை வீட்டில் நிறுத்திவிட்டு, பேருந்தில் அலுவலகம் சென்று வாருங்கள். இப்படிச் செய்வதனால் சமூகத்தோடு நேரடியான தொடர்பு ஏற்படுவதோடு, சேமிப்பிற்கும் வழியேற்படும். இது போன்ற நடவடிக்கையால் மாதம் ஒரு முறை 1000 ரூபாய் சேமித்தால் மேலே குறிப்பிட்டதைப் போல, மியூச்சுவல் ஃபன்ட் முதலீட்டின் மூலம் இருபது வருடத்தில் 15 இலட்ச ரூபாய் சேர்க்கலாம்.

3.மாதத்தில் ஒரு திரைப்படத்தைத் தவிர்க்கவும்

மாதத்திற்குப் பலமுறை திரைப்படத்திற்குச் செல்லும் பழக்கம் இருந்தால் அதில் ஒன்றைத் தியாகம் செய்யுங்கள். இரண்டு குழந்தைகளோடு ஒரு தம்பதியினர் திரைப்படத்திற்குச் சென்றால் எப்படியும் 1500 ரூபாய் காலியாகிவிடும். இதனை ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபன்ட் முதலீடாக மாற்றினால் இருபது வருட முடிவில் உங்கள் கணக்கில் 22 இலட்ச ரூபாய் சேர்ந்துவிடும்.

 

 

4. ஓட்டலுக்குச் செல்வதை மாதத்திற்கு ஒரு முறை தவிர்க்கவும்.

நடுத்தர நிலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று மதிய உணவு அல்லது இரவு உணவுக்காக ஓட்டலுக்குச் சென்றால், ஏறக்குறைய 1,500 ரூபாய்ச் செலவாகும். மாதத்திற்கு ஒரு முறை இந்த ஓட்டல் செலவைத் தியாகம் செய்து அந்தப் பணத்தை முதலீடு செய்தால், 20 ஆண்டுகளில் 22 இலட்ச ரூபாய் சேமிக்கலாம்.

5. மது அருந்தும் பழக்கமிருந்தால் தவிர்த்திடுங்கள்

மது அருந்துவதால் உடல் நலமும் மனவளமும் பாதிப்படைகிறது. எனவே மதுவின் வாசனையில்லாமல் வாழ்வதுதான் மகத்தான வாழ்க்கையாக அமையும். மதுப் பழக்கத்திற்கு உள்ளாகியிருந்தால் அதனைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்த்து முற்றிலும் நிறுத்திவிடவும். மது அருந்துவதை மாதம் ஒருமுறை தவிர்த்தால்கூட, 1000 ரூபாய் அளவுக்குச் சேமிக்கலாம். இந்த 1000 ரூபாயை முறையான சேமிப்புத் திட்டத்தின் (SIP) மூலம் மியூச்சுவல் ஃபன்டில் முதலீடு செய்தால் அடுத்த 20 வருடத்தில் 15 இலட்ச ரூபாய் குவிந்துவிடும்.

6. தேவையில்லாத பொருட்களை வாங்குவதைத் தவிர்த்தல்

இணையம் வழியாகப் பொருட்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம் நவீன சமூகத்தில் ஒரு நோயாகவே மாறியுள்ளது. விலை சற்றுக் குறைவாக இருக்கலாம். ஆனால், கையில் மொபைல் இருக்கிறது, பாக்கெட்டில் டெபிட் கார்டும் உள்ளது என்பதற்காகக் கண்ணில் காண்பதையும் மனதில் தோன்றுவதையும் வாங்குவதால் யாருக்கு என்ன பயன்? கிரடிட் கார்டைப் பயன்படுத்தினால் இன்னும் நிலைமை மோசமாகிவிடும். வங்கியில் இருந்து பெற்ற கூடுதல் தொகைக்கு அதிகமான வட்டிகட்ட வேண்டிய சூழலும் ஏற்படும். இதுபோன்று தேவையற்ற ஷாப்பிங்கைத் தவிர்த்தால் மாதம் ஏறக்குறையை 2000 ரூபாய் சேமிக்கலாம். இதனை முறையான சேமிப்புத் திட்ட முதலீடாக மாற்றினால் 20 வருடத்தில் 30 இலட்ச ரூபாய் உங்கள் கையில்.

7. உணவு மற்றும் மின்சார விரயத்தைத் தவிர்க்கவும்

உணவுப் பொருள் விரயம் என்பது அனைவருடைய வீட்டிலும் நடக்கும் பொதுவான நிகழ்வாக உள்ளது. அதனைப் போலவே மின்சாரத்தையும் விரயம் செய்கிறோம். மின்விளக்குகள், மின்விசிறி, கணிப்பொறி, குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றின் பயன்பாட்டைத் தேவையில்லாத போது தவிர்த்து மின்சாரத்தைச் சேமிக்கலாம். உணவுப் பொருள் விரயமாவதைத் தவிர்த்தல், மின்சாரச் சிக்கனம் ஆகியவற்றின் மூலம் மாதம் 1000 ரூபாய் சேமிக்கலாம். இந்தச் சேமிப்பு முதலீடாக மாற்றினால் 20 வருட முடிவில் 15 இலட்ச ரூபாய் சேர்ந்துவிடும்.

ஒன்றா… இரண்டா… நன்மைகள் ஏராளம் !

மேலே கண்ட ஒவ்வொரு விசயங்களின் அடிப்படையிலும் சேமித்து அதனை முதலீடு செய்யும் பொழுது, 20 வருட முடிவில் அம்முதலீட்டை 1.3 கோடி ரூபாயாக உயா்த்திக் காட்ட முடியும். ஒவ்வொரு மாதத்திலும் நிகழும் உங்களுடைய வழக்கமான நடவடிக்கைகள் எதனையும் முற்றிலுமாக நிறுத்தாமல், அவை ஒவ்வொன்றையும் மாதம் ஒரு முறை மட்டும் தவிர்ப்பதன் மூலமாகவே இந்த அளவுக்கு நன்மைகளைப் பெற முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

மாதம் ஒருமுறை நாம் தவிர்க்கும் செலவுகளின் மூலமாக வரும் சேமிப்பினை நம்முடைய குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் அவர்களுக்கும் சிக்கனத்தையும் சேமிப்பினையும் கற்றுக் கொடுக்கலாம். இதன் மூலமாக நம்முடைய குழந்தைகளை வீட்டுக்கு ஏற்ற நல்ல பிள்ளைகளாகவும், நாட்டுக்கு ஏற்ற சிறந்த குடிமக்களாகவும் வளர்க்கலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Avoiding these 7 things once a month can make you a crorepati

Avoiding these 7 things once a month can make you a crorepati
Story first published: Thursday, May 17, 2018, 11:11 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns