63,445 ரூபாய் சம்பளம் வாங்கும் ரவி அண்ணனுக்கே Loan கிடையாதா..? ஏன்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அதிகம் வங்கிகளிடம் கடன் வாங்குபவர்கள் மாதச் சம்பளம் வாங்கும், சம்பள ஏழைகள் தான்.

 

பின்ன பணக்காரனா பேங்குக்கு வந்து, அப்ப ஆத்தாளுக்கு வைத்தியச் செலவு செய்ய, ஒண்ட ஒரு சின்ன வத்திப் பொட்டி வீடு வாங்க வாரக் கணக்கில் அலஞ்சி கடன் (Loan) கேப்பான்..?

கடந்த 29 மார்ச் 2019 நிலவரப்படி இந்தியாவில் தனி நபர்கள் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், வீடு, க்ரெடிட் கார்ட், வாகனம், கல்வி மற்றும் மருத்துவம் போன்ற தேவைகளுக்கு, வங்கிகளில் கடன் வாங்கி இருப்பதை இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கியே சொல்கிறது.

அடித்து தூக்கும் பங்கு சந்தை.. பாஜகவுக்கு சாதகமான கருத்துக் கணிப்புகள் காரணமா?

எவ்வளவு வாங்கி இருக்கிறார்கள்

எவ்வளவு வாங்கி இருக்கிறார்கள்

மார்ச் 2019 நிலவரப்படி, மொத்தமாக இந்தியாவில், வங்கிகள் கொடுத்திருக்கும் கடனின் அளவு 86.74 லட்ச கோடி ரூபாய் தான். அதில் 25.5 சதவிகிதம் இப்படி நம்மைப் போன்ற சம்பள ஏழைகளுக்குத் தான் கடன் கொடுத்திருக்கிறார்கள் என்பதை ஆர்பிஐ கட்டம் போட்டு, கலர் செய்துக் காட்டுகிறது. மேலே சொன்னது போல இந்தியாவில் வங்கிகள், தனி நபர் கடன்களின் கீழ் சுமார் 22.20 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள். அதில் சுமாராக 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடனாக மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

பெரிய தொகை

பெரிய தொகை

எப்போதுமே சம்பள ஏழைகளிடம் ஒரு பெரிய தொகை பணம் தயாராக இருப்பதில்லை. இந்த இடத்தில் பெரிய தொகை என்பது, சம்பள ஏழைகள் வாங்கும் சம்பளத்தைப் பொருத்து வெறும் 5,000 ரூபாய் முதல் தொடங்குகிறது. ஆனால் எப்படியும் ஒரு சம்பள ஏழையிடம் தன் ஒரு மாத சம்பளத்துக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டால் நிச்சயம் அவர்களிடம் அவ்வளவு பெரிய தொகை இருக்காது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். இதற்கு நல்ல உதாரணம் நம் ரவி அண்ணன்.

ரவி அண்ணன்
 

ரவி அண்ணன்

ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மாதம் 63,445 ரூபாய் சம்பளம். அப்பா ரவி அண்ணன் வீட்டில் தான் இருக்கிறார். அப்பா முன்னாள் அரசு ஊழியர் என்பதால் மாதம் 16,000 பென்ஷன் வந்துவிடும். ரவி அண்ணனுக்கு 2017-ல் முன் தான் திருமணம் ஆனது. மனைவி ராதாவும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார். மாதம் 16,000 ரூபாய் சம்பளம்.

கடன் (Loan)ரிஜெக்‌ஷன்

கடன் (Loan)ரிஜெக்‌ஷன்

கடந்த ஏப்ரல் 2019-ல் இவரின் அப்பாவுக்கு ஒரு சிறிய சாலை விபத்து. விபத்தில் இவர் அப்பாவின் காலில் ஒரு பெரிய காயம் ஏற்பட்டது. ரவி அண்ணனின் அப்பாவுக்கு சர்க்கரை நோய் இருந்ததால் காயம் இப்போது வரை ஆறவில்லை. இப்போது ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் 1,00,000 ரூபாய் தேவை. ரவி அண்ணனிடம் இல்லை. இதற்காக அரசு வங்கிகளிடம் தனி நபர்க் கடன் வாங்க விண்ணப்பித்திருக்கிறார். பல அரசு வங்கிகளும் தனி நபர்க் கடன்களைக் கொடுக்க முடியாது என விண்ணப்பத்தை விட்டெறிந்திருக்கிறார்கள். பல வங்கியில் நேரடியாக கடன் கேட்டு விண்ணப்பித்திருப்பதில் இருந்து பல காரணங்களைக் காட்டி ரவி அண்ணனின் கடன் விண்ணப்பத்தை குப்பைக்கு அனுப்பி இருக்கிறார்கள். வங்கி அதிகாரிகள், ரவி அண்ணனின் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க, என்னென்ன காரணங்கள் சொன்னார்கள்..?

மிச்சம் எவ்வளவு..?

மிச்சம் எவ்வளவு..?

ஏற்கனவே நம் ரவி அண்ணனுக்கு வீட்டுக் கடன் இ எம் ஐ ஓடிக் கொண்டிருக்கிறது. ஆக மாத சம்பளம் 63,445 ரூபாயில் 26,000 ரூபாய் போய்விட்டால் மீதம் 37,445 ரூபாய் தான். ஆக இந்த 37,445 ரூபாய் ரவி அண்ணன் தன் அன்றாட குடும்ப செலவுகளை பார்த்துக் கொள்ளவே சரியாக இருக்கும். எப்போதுமே ஒரு மாத சம்பளத்தில் 40 - 50 சதவிகிதத்தை ஒரு மாத இ எம் ஐ யாக கணக்கிட்டு தான் வங்கிகள் கடன் கொடுக்கும். ஏற்கனவே ரவி அண்ணன் தன் ஒரு மாதச் சம்பளத்தில் 41%-த்தை வீட்டுக் கடனுக்கு இ எம் ஐ-யாக செலுத்திக் கொண்டிருக்கிறார். எனவே மேற் கொண்டு கடன் கொடுக்க முடியாது எனச் சொல்லி இருக்கிறார்கள், வங்கி அதிகாரிகள்.

ரவி கேள்வி

ரவி கேள்வி

சார் நீங்கள் சொல்வது சரி தான். ஒவ்வொரு வங்கியும் ஒருவர் வாங்கும் சம்பளத்தில் 50% வரை இ எம் ஐ கணக்கிட்டு கடன் கொடுப்பார்கள் எனச் சொல்கிறீர்கள் இல்லையா. ஆக எனக்கான இ எம் ஐ 26,000 ரூபாய் போக மீதமுள்ள 5,500 ரூபாயை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த 5,500 ரூபாயை நான் உங்களுக்கு இ எம் ஐ-ஆக ஒவ்வொரு மாதமும் கொடுக்கிறேன். எனக்கு ஒரு லட்சம் ரூபாயை கடனாக, என் அப்பாவுக்கு மருத்துவ செலவுகளை மேற்கொள்ள கொடுங்களேன்...! எனச் சொல்லி இருக்கிறார். சரியான கேள்வி தானே..? ஆனால் இதற்கும் மறுத்திருக்கிறார்கள் வங்கி அதிகாரிகள். ஏன்..?

க்ரெடிட் கார்ட்

க்ரெடிட் கார்ட்

ரவி அண்ணன் நான்கு வருடமாக க்ரெடிட் கார்ட் பயன்படுத்தி இருக்கிறார். என்ன பிரச்னை என்றால் க்ரெடிட் கார்டில் கொடுத்திருக்கும் 45,000 ரூபாய் க்ரெடிட் லிமிட்டையும் பல முறை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறார். அடுத்த மாதம் அப்பாவின் பென்ஷன் பணம், மனைவியின் பணத்தைப் பயன்படுத்தி முழு தொகையையும் ஒழுங்காக அடைத்து விடுவார் என்பது மட்டும் தான் இங்கு ஆறுதலான விஷயம்.

நிச்சயம் கடன் இல்லை

நிச்சயம் கடன் இல்லை

அப்படி ஒழுங்காக அடைத்திருக்கவில்லை என்றால் இந்நேரம் ரவி அண்ணனின் அப்ளிகேஷனைக் கூட எந்த வங்கியும் வாங்கி இருக்க மாட்டார்கள். இப்படி பல முறை ரவி அண்ணன் கார்டை தேய்த்திருப்பதைக் காரணம் காட்டி, இந்த 1,00,000 ரூபாய் தனி நபர்க் கடனை ரத்து செய்தார்கள் வங்கி அதிகாரிகள். அப்படி என்றால் க்ரெடிட் கார்டில் எவ்வளவு பணத்தைத் தான் பயன்படுத்த வேண்டும்..? 50% வரை பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஏதாவது தவிர்க்க முடியாத சூழலில், வேறு எந்த வங்கிக் கடனும் இல்லாத போது வேண்டுமானால் 75 சதவிகிதம் வரை போகலாம். இப்படி அடிக்கடி 100% க்ரெடிட் லிமிட்டைப் பயன்படுத்துவதால் நிச்சயம் உங்களை நம்பி கடன் கொடுக்க மாட்டோம். அப்படியே கொடுத்தாலும் வட்டியை மிக அதிகமாக வசூலிப்போம் என்றார்கள் வங்கி அதிகாரிகள்.

வேறு காரணங்கள்

வேறு காரணங்கள்

ரவி அண்ணனால் பதில் பேச முடியவில்லை. கொஞ்சம் வாயடைத்துப் போனார். இருந்தாலும் ஒரு மாதிரியாக "வேறு என்ன காரணங்களுக்காக என் ஒரு லட்சம் ரூபாய் கடனை ரத்து செய்ய முடியும்" எனக் கேட்டார். ஒவ்வொன்றாக பட்டியலிடத் தொடங்கினார் வங்கி அதிகாரி.

விண்ணப்பத்தில் தவறு

விண்ணப்பத்தில் தவறு

நம் ரவி அண்ணன் கடன் (Loan) கேட்டு விண்ணப்பித்திருந்த விண்ணப்பப் படிவத்தில் தன் புதிய முகவரியைக் கொடுக்காமல் மனிதர் தன் பழைய வீட்டின் முகவரியைக் கொடுத்துவிட்டார். வங்கியையே ஏமாற்ற , முயற்சிக்கிறீர்களா..? என கொதித்துவிட்டார்கள் வங்கிகள். விண்ணப்பத்தின் மேல் சிவப்பு மையில் ரிஜெக்டட் என முத்திரை குத்த இது மிகப் பெரிய அடிப்படைக் காரணமாகிவிட்டது. இப்படி விண்ணப்பத்தில் நம் பெயர், முகவரி தொடங்கி நிதி நிலை வரை அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும் இல்லையெனில் ரவி அண்ணனின் ரிஜெக்‌ஷன் தொடரும் என்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.

ஏற்கனவே கடனாளி

ஏற்கனவே கடனாளி

சார் நீங்க வீட்டுக் கடன் (Loan) வைத்திருப்பதாகச் சொன்னீர்கள் தானே..?

ஆமாம் சார்....

பிறகு ஏன் அதே வங்கியின் (வீட்டுக் கடன் வாங்கிய வங்கியில்) தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்கவில்லை...?

அங்கு சில வசதிகள் சரி இல்லை சார். அதான் உங்கள் வங்கிக்கு வந்தேன்.

இதை வங்கிகள் அப்படி எடுத்துக் கொள்ளாது சார். நீங்கள் ஏற்கனவே கடன் வாங்கிய வங்கியிலேயே ஒழுக்கமாக நடந்து கொள்ளவில்லை போல, அதனால் தான் அங்கு தனி நபர் கடன் வாங்க முடியாமல் இங்கு வந்திருக்கிறார் எனக் கருதுவோம். ஆகையால் கடன் (Loan) விண்ணப்பம் ரத்தானாலும் பரவாயில்லை, முதலில் ஏற்கனவே கடன் வாங்கி இருக்கும் வங்கியில் பேசி விட்டு தான் அடுத்த வங்கியிடம் கடன் கேட்க வேண்டும், என குண்டைத் தூக்கிப் போட்டார்கள் அதிகாரிகள்.

வங்கியிடம் கேட்பது

வங்கியிடம் கேட்பது

ரவி சார், நேரடியாக வங்கி அதிகாரிகளிடம் கடன் கேட்டு விண்ணப்பித்திருக்கிறீர்களா..?

ஆமாம் சார். நான்கு வங்கியில் முறையாக விண்ணப்பப் படிவங்களை நிரப்பி விண்ணப்பித்தேன்.

இப்படி பார்க்கும் எல்லா வங்கியிலும் கடன் (Loan) கேட்டு விண்ணப்பித்தாலும், உங்கள் சிபில் ஸ்கோர் குறையும். இப்படி நான்கு வங்கிகள் உங்களுக்கு கடன் தர மறுத்த விஷயம் எங்களுக்கும் தெரிய வரும். எனவே நான்கு வங்கிகள் நிராகரித்த உங்களை நம்பி, நாங்கள் மட்டும் எப்படி கடன் கொடுப்போம் என கிடுக்கிப் பிடி போடுகிறார் வங்கி அதிகாரி. இனி எந்த வங்கிகளிடமும் முதலில் கடன் கிடைக்குமா..? என தீர விசாரித்துவிட்டு, அதன் பிறகு விண்ணப்பியுங்கள், அது வரை விண்ணப்பிக்க வேண்டாம். எனவும் டிப்ஸ் கொடுக்கிறார் வங்கி அதிகாரி.

உறவுமுறை

உறவுமுறை

இவ்வளவு நேரம் பேசிய வங்கி அதிகாரிக்கு சூடாக ஏலக்காய் டீ வந்தது. ரவி அண்ணனுக்கு கொடுக்காமல் (கேக்கவே இல்லங்க, அவ்வளவு மரியாதை) குடித்தார். தொண்டையை இருமி சரி செய்து கொண்டு தொடர்ந்தார் வங்கி அதிகாரி. உங்களுக்கு வயசு என்ன ரவி..?

36 சார்.

சுமார் கல்லூரி படிப்ப முடிச்சு 15 வருஷம் இருக்கும். ஆக உங்க பெயர்ல ஒரு வங்கி கணக்காவது கடந்த 15 வருஷமா தொடர்ச்சியா இருக்கா..? அதாவது உங்க 20 வயசுல இருந்து ஒரு வங்கிக் கணக்கை ஒழுங்கா பயன்படுத்திக் கிட்டே வர்றீங்களா..?

இல்லங்க...

இதுவும் உங்களுக்கு கடன் கொடுக்காததுக்கு ஒரு முக்கியக் காரணம். ஒரு வங்கியோட கூட நீங்க 5 வருஷமா கணக்கு வெச்சிக்கல. எல்லா வங்கிக் கணக்கும், அதோட வேலை முடிஞ்ச உடனேயே அப்படியே டார்மெண்டா விட்டுடுறீங்க. (டார்மெண்ட் - கணக்க செயல்படுத்தாம கைவிட்டுடுறீங்க). இதுவும் ஒரு மோசமான வாடிக்கையாளர்கள் நடவடிக்கையில ஒண்ணு. ஆக இனியாவது ஒரு சில வங்கிக் கணக்குகள பர்சனலா, நிரந்தரமா வெச்சிங்குங்க என்கிறார் வங்கி அதிகாரி.

வேலை

வேலை

ம்ம்ம்ம்.... ரவி நீங்க தனியார் கம்பெனில, என்ன பதவில இருக்கீங்க.

ஏரியா மேனேஜர் சார்...

ம்ம்ம்.... உங்க கம்பெனிக்கு எங்க வங்கி டி ரேடிங் தான் கொடுத்திருக்கு.

பன்ணாட்டு நிறுவனங்கள்ள வேலை பாக்குறவங்க ‘ஏ' ரக வாடிக்கையாளர்கள்.

உள்நாட்டிலேயே நல்ல நிறுவனங்களில் வேலை பாக்குறவங்க ‘பி' ரக வாடிக்கையாளர்.

உள்நாட்டில கொஞ்சம் சுமாரான கம்பெனிங்கள்ள வேலை பாக்குறவங்க ‘சி' ரக வாடிக்கையளர்கள்.

உங்கள மாதிரி பெயர் தெரியாத, சின்ன கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள், பத்திரிகையாளர்கள் (எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி), மீடியா ஆட்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள் மாதிரி கெடுபிடி போடுறவங்க, சட்டம் பேசுறவங்க எல்லாருக்கும் ‘டி' கிரேட் தான்.

இந்த கிரேட் படி எங்கள் வங்கி உங்களைப் போன்ற மாத சம்பளதாரர்களுக்கு கடன் கொடுக்காது.

பணி மாற்றம்

பணி மாற்றம்

ரவி ஒரு பர்சனலான கேள்வி... கேட்கலாமா...?

கேளுங்க சார்...

ஆகஸ்ட் 2017 வரை ஒரு கம்பெனில வேலை, அப்புறம் செப்டம்பர் 2017-ல் இருந்து ஆகஸ்ட் 2018 வரை ஒரு கம்பெனில வேலை, திரும்ப செப்டம்பர் 2018-ல் இருந்து இப்ப வரை ஒரு வேலை இப்படி அடிக்கடி வேலை மாறி இருக்கீங்க. உங்களுக்கு இது தப்பா தெரியல..?

அப்படி இல்ல சார், அந்த கம்பெனிங்கள விட இப்ப இருக்குற கம்பெனில நல்ல சம்பளம் தர்றான்ங்க. அதனாலத் தான் மாறினேன்.

இல்ல ரவி பணிமாற்றத்தப்ப ஒரு 20 சதவிகிதமாவது சம்பள உயர்வோடு போனால் பரவாயில்லை. ஆனால் நீங்கள் வெறும் 10%, 16%-க்கு எல்லாம் பணி மாற்றம்.

அதனால உங்க மேல இருக்குற நம்பிக்கை இன்னும் பலமா அடிவாங்குது. இதுவும் உங்களுக்கு கடன் கொடுக்காம இருக்க முக்கிய காரணமா இருக்கு...!

வருத்தம்

வருத்தம்

இப்படி அத்தனையையும் திரும்பிப் பார்க்கும் போது ரவி அண்ணனுக்கே கொஞ்சம் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. ஒன்றும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

மனதை தளர விடாதீர்கள் ரவி, எப்படியும் அரசு வங்கிகள் உங்களுக்கு கடன் தராது. எனக்கு தெரிந்த ஒரு தனியார் வங்கி நண்பர்கிட்ட சொல்றேன் போய் பாருங்க என தேற்றினார்.

தனியார் வங்கி

தனியார் வங்கி

தனியார் வங்கிகள் என்றால் நம் ரவி அண்ணனுக்கு அலர்ஜி. சுத்தமா ஆகாது. அழகான பெண்களை வைத்து சிரித்துப் பேசி மொத்த வேலையையும் முடித்துவிடுவார்கள். வட்டி ஆரம்பமே 16% தான் என யோசித்துக் கொண்டே அரசு வங்கி அதிகாரி சொன்ன தனியார் வங்கி நண்பரைச் சந்தித்தார். அரசு வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு இரண்டு வருடத்தில் 15.25% வட்டி செலுத்த வேண்டும். மாதம் 4800 ரூபாய் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் இப்போது இந்த தனியார் வங்கியில் அதே ஒரு லட்சம் ரூபாய்க்கு 2 வருடத்தில் 18.25% வட்டி செலுத்த வேண்டும். மாதம் 5,041 ரூபாய். வேறு எங்காவது பார்த்துவிட்டு வரலாம் எனத் தோன்றியது. போன் வந்தது, எண்ண ஓட்டத்தை அடக்கிவிட்டு போனைப் பார்த்தார். அப்பாவிடமிருந்து அழைப்பு.

அப்பா

அப்பா

போனை எடுத்த உடன் "சாமி, அப்பா பேசுறேன்யா.

"சொல்லுப்பா..."

"ஐயா, கால் ரொம்ப வலிக்குதுய்யா, வலியில கண்ணீரே வருதுய்யா, வலி பொறுக்க ஏதாவது நல்ல மாத்திரை இருந்தா வாங்கிட்டு வாயா... அப்பாவால வலி தாங்க முடியல" என தன் தளதளத்த குரலில் மகனிடம் கெஞ்சுகிறார்.

"சரிப்பா, கொஞ்சம் பொறுத்துக்க, 30 நிமிஷத்துல வந்துடறேன்" என அப்பாவைத் தேற்றி போனை வைக்கிறார் நம் ரவி அண்ணன்.

18.25% வட்டிக்கு தனியார் வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்து விட்டு அப்பா கேட்ட வலி நிவாரணியை வாங்கச் சென்றார் ரவி அண்ணன். இனியாவது நிதி மற்றும் வங்கி சார்ந்த விஷயங்களில் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டார் ரவி அண்ணன் அப்ப நீங்க..?

குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் ஏறக்குறைய எல்லா அரசு வங்கிகளிலும் கடைபிடிக்கப்படுகின்றன. தனியார் வங்கிகளில் இந்த விதிமுறைகள் மாறலாம். எனவே எந்த ஒரு வங்கியிலும் இந்த விதிமுறைகளை முழுமையாக கடை பிடிப்பதில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

why ravi does not get loan even drawing salary of rs 63,445 per month

why ravi does not get loan even drawing salary of rs 63,445 per month
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X