கொரோனா வைரஸ் தொற்று மற்றும் லாக்டவுன் அறிவிப்பால் பல கோடி மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தது, மட்டும் அல்லாமல் பலருக்கும் சம்பளம் மற்றும் வருமானம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்த நிலையில் சாமானிய மக்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் வருமான வரிச் சலுகை இருக்கும் என அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மக்களுக்குச் சாதகமாக எவ்விதமான அறிவிப்பு இல்லாத நிலையில், பிஎப் மற்றும் யூலிப் திட்டங்கள் மீதான முதலீட்டுக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும் வரிச் சலுகை குறைக்கப்பட்டுப் பெரிய அளவிலான பாதிப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்புகளைத் தாண்டி 2021-22 நிதியாண்டில் வருமான வரியைச் சேமிக்கும் வழிகளைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
அரசு ஊழியராக இருந்தாலும் சரி, தனியார் ஊழியராக இருந்தாலும் சரி அனைத்துத் தரப்பு ஊழியர்களும் 80சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகையைப் பெற முடியும். உதாரணமாக நீங்கள் 30 சதவீத வருமான வரிப் பலகையில் இருக்கும் பட்சத்தில் 80சி பிரிவின் கீழ் சுமார் 1,50,000 ரூபாய் அளவிலான வருமானத்திற்கு வரிச் சலுகை பெற்று சுமார் 45,000 ரூபாய் வரையில் சேமிக்க முடியும்.
மேலும் இந்த 80சி பிரிவின் கீழ் பெறப்படும் வரிச் சலுகை அனைத்தும் பழைய வரி கணக்கீட்டு முறையைத் தேர்வு செய்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
80சி பிரிவின் கீழ் வரும் வருமான வரி விலக்கு பெறும் முதலீடுகள்
- பிராவிடண்ட் பண்ட் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள்
- வீட்டுக்கடனுக்குச் செலுத்தப்படும் அசல் தொகை
- பிபிஎப் திட்டத்தில் வருடம் 500 ரூபாயில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம்.
- இரு குழந்தைகளுக்கான கல்வி செலவுகள்
- லைப் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கான ப்ரீமியம் தொகை (கணவன், மனைவி மற்றும் குழந்தை)
- யூலிப் திட்டங்கள் மீதான முதலீடுகள் (கணவன், மனைவி மற்றும் குழந்தை)
- தபால் நிலையத்தில் மூலம் செய்யப்படும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் மீதான முதலீடுகள்
- வங்கி அல்லது தபால் நிலையத்தில் 5 வருட டெபாசிட் திட்ட முதலீடு
- பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் வரும் 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம்.
80சி பிரிவை தாண்டி கிடைக்கும் வருமான வரிச் சலுகை திட்டங்கள்
- தேசிய பென்ஷன் பண்ட் திட்டங்களில் 50,000 ரூபாய் வரையில் முதலீடு வரி சலுகையைப் பெறலாம்.
- மருத்துவக் காப்பீடு மூலம் வருடம் 25,000 ரூபாய் அளவிலான தொகைக்கும், பெற்றோர்களுக்கான மருத்துவக் காப்பீடு மூலம் மற்றொரு 25,000 ரூபாய்க்கும் வருமான வரிச் சலுகை பெறலாம்.
- வீட்டுக் கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி தொகைக்கு வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரையில் வருமான வரிச் சலுகை பெறலாம்.
- வங்கி அல்லது தபால் நிலையத்தில் செய்யப்படும் டெப்பாசிட் தொகைக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்தில் 10,000 ரூபாய் வரையில் வரிச் சலுகை பெறலாம்.
- கல்விக் கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி தொகைக்கு முழுமையான வரிச் சலுகை பெற முடியும்.
- குடும்ப உறுப்பினர்களின் உடல் ஊனமுற்ற சிகிச்சைக்காக வருடம் 75,000 ரூபாய் வரையிலான செலவுகளுக்கு வரிச் சலுகையைப் பெற முடியும்.
- இதேபோல் ஏய்ட்ஸ் அல்லது கேன்சர் போன்ற கொடிய நோய்களுக்கு 40,000 ரூபாய் வரையிலான சிகிச்சை செலவிற்கு வரிச் சலுகை பெற முடியும்.
- எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதன் மூலம் வருடம் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வருமான வரிச் சலுகை பெற முடியும்.