உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இப்போது வரை சீனா தான் இருக்கிறது.
அதனாலேயே தற்போது கொரோனாவால் அதிக பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. அப்படி என்ன பெரிய பிரச்சனையை சந்திக்கிறது? என்றால் வேலை வாய்ப்பு.
ஆம். வேலை வாய்ப்பு தொடர்பான பிரச்சனைகள், சீனாவில் பெரிய அளவில் தலை தூக்கத் தொடங்கி இருக்கின்றன. சீனாவுக்கு ஜிடிபி பிரச்சனை இல்லை, வேலை இல்லா திண்டாட்டம் தான் பெரிய பிரச்சனை என்கிறார் பேராசிரியர் வில்லி லம் (Willy Lam).

வேலை போச்சு
வாங் (முழு பெயர் குறிப்பிடவில்லை) என்பவருக்கு 26 வயது. பெய்ஜிங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு டெக் ஊழியர். கடந்த ஆண்டு வரை தனக்குப் பிடித்தமான கம்பெனிகளைத் தேடி, ஒவ்வொரு வேலையாக மாறிக் கொண்டு இருந்தார். ஆனால் இந்த ஜனவரி 2020-ல், அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த கம்பெனியில் இருந்து லே ஆஃப் செய்யப்பட்டார்.

நரக வாழ்கை
"நரகத்தில் வாழ்வதைப் போல உணர்கிறேன்" என சி என் என் பத்திரிகையிடம் பேசி இருக்கிறார். ஏற்கனவே சீனாவில் நிலையற்று இருந்த வேலைவாய்ப்பு சந்தையை மேலும் மோசமாக்கி இருக்கிறது இந்த கொரோனா. அதோடு "என் முழு பேர சொல்லாதீங்க. எனக்கு வேலை போன விஷயம் நண்பர்களுக்கும், வீட்ல உள்ளவங்களுக்கும் தெரிய வேண்டாம்" எனவும் சிஎன்என்-னிடம் சொல்லி இருக்கிறார் வாங்.

வேலை இழப்பு
இந்த வரிகள், கோடிக் கணக்கில் தங்கள் வேலை வாய்ப்புகளை இழந்து கொண்டிருக்கும், சீனர்களின் வலியின் வெளிப்பாடு. கடந்த மார்ச்சில் மட்டும் சுமாராக 8 கோடி பேர் சீனாவில் வேலை இழந்து இருப்பார்கள் என சங் பின் (Zhang Bin) சொல்கிறார். இன்னும் இந்த எண்ணிக்கை எவ்வளவு அதிகரிக்கும் எனத் தெரியவில்லை.

பட்டதாரிகள்
இதுவரை, வரலாறு காணாத அளவில், சீனாவில், 87 லட்சம் இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு, வேலை தேடப் போகிறார்களாம். இந்த எண்ணிக்கையே, தற்போது சீன அரசுக்கு பெரிய சவாலாக வந்து அமைந்து இருக்கிறது. வேலை வாய்ப்பு பிரச்சனைக்கு கூடுதலாக வலு சேர்த்து இருக்கிறது.

பொலிட் பீரோ
மக்களுக்கு வேலை பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் நிலைத் தன்மையை உறுதி செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கச் சொல்லி இருக்கிறது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ. சீனா போல அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அடி வாங்கினால், சமூகத்தில் ஒரு அமைதி இல்லாத சூழல் உருவாகும். அது அரசியல் ரீதியாக பல பிரச்சனைகளை உருவாக்கும் என்கிறார் பேராசிரியர் வில்லி லம்.

வேலை இல்லை
32 வயதான யி ஃபெங் (பெயர் குறிப்பிட வேண்டாம் என வாங்கின் கோரிக்கை இவரிடத்திலும் இருந்ததாகச் சொல்கிறது சி என் என்), ஷாங்காயில், ஒரு லாஜிஸ்டிக்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். மார்ச்சில் வேலை பறி போன பின், இதுவரை வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டு இருக்கிறாராம்.

நேர்காணல் போச்சு
ஆண்ட்ரியா யாவ் (Andrea Yao) என்கிற 22 வயது இளம் பெண், தான் ஒரு ஊடகவியலாளராக வர வேண்டும் என்கிற கனவுடன் தன் பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த வருடம் அது மிகவும் கடினம் என அவரே சொல்கிறார். கடந்த மாதம் ஒரு தினசரியில் நேர்காணலுக்கு தேர்வாகி இருந்தார். ஆனால் கொரோனாவால் நேர்காணலுக்குச் செல்ல முடியவில்லை.

61-ல் 5 மட்டுமே
ஆண்ட்ரியா, வேலைக்காக சுமார் 61 கம்பெனிகளுக்கு தொடர்ந்து விண்ணப்பித்தாராம். ஆனால் வெறும் 5 கம்பெனிகள் மட்டும் தான் ரெஸ்யூமைக் கேட்டு இருக்கிறார்களாம். பாக்கி 56 கம்பெனிகள் திரும்பி கூட பார்க்கவில்லை என்கிறார் ஆண்ட்ரியா. இது மனதளவில் பெரிய அழுத்தத்தைக் கொடுப்பதாக, அவரே சி என் என் பத்திரிகையிடம் சொல்லி இருக்கிறார்.

சந்தை விவரம்
நிறுவனங்கள் வெளியிடும் காலிப் பணியிடங்கள் விவரம், கடந்த ஜனவரி முதல் மார்ச் 2020 வரையான காலாண்டு எண்ணிக்கையை, டிசம்பர் 2019 காலாண்டுடன் ஒப்பிட்டால் 28 % சரிந்து இருக்கிறதாம். அதாவது காலிப் பணியிடங்கள், முந்தைய காலாண்டை விட 28 % சரிந்து இருக்கிறது. ஆனால் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை 9 % அதிகரித்து இருப்பதாக China Institute for Employment Research மற்றும் Zhaopin.com இணைந்து நடத்திய சர்வேயில் தெரிய வந்திருக்கிறது.

ஸ்தம்பித்த பொருளாதாரம்
26 வயது அனுபவமுள்ள இளைஞருக்கும் வேலை இல்லை,
32 வயது நடுத்தர வயதினரும் வேலை இல்லாமல் சிரமப்படுகிறார்கள்,
22 வயது புதிய பட்டதாரிகளுக்கும் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது... என்றால் சீனாவில் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது எனப் புரிந்து கொள்ள முடிகிறது.

சுழற்சி
ஒட்டு மொத்தத்தில், வேலை வாய்ப்பு சார்ந்த பொருளாதாரம், சீனாவில் ஸ்தம்பித்து இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
வேலை வாய்ப்பு இல்லை என்றால் நுகர்வு அதிகரிக்காது,
நாட்டில் நுகர்வு இல்லை என்றால் உற்பத்தி அதிகரிக்காது,
பொருளாதாரத்தில் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்றால் வேலை வாய்ப்பு பெருகாது... இந்த மோசமான பொருளாதார சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும், பொருளாதாரம் வளராது. இதை சீனா எப்படி சமாளிக்கப் போகிறதோ தெரியவில்லை.