டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் வெற்றியை தொடர்ந்து போர்டு நிறுவனம் புதிய எலக்ட்ரிக் கார்-ஐ அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது உலகில் பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும், எலக்ட்ரிக் கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.
சீனாவில் இருக்கும் முன்னணி எல்க்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான நியோ அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று வரும் பிற முன்னணி நிறுவனங்களும் களத்தில் இறங்கியிருக்கும் நிலையில் தற்போது சீனாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெக் நிறுவனமான சியோமி எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறக்கியுள்ளது.

சியோமியின் மாபெரும் வளர்ச்சி
சியோமி தனது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கருவிகள் விற்பனை மூலம் உலகளவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வேகமாக வளர்ந்து வரும் இந்த நிலையில், சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் என்னும் கார் தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து எல்கட்ரிக் கார் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹூவாய் எலக்ட்ரிக் கார்
சமீபத்தில் சீனாவின் முன்னணி டெலிகாம் கருவிகள், ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹூவாய் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கப் போகிறது எனச் செய்தி வெளியான நிலையில், ஹூவாய் இந்தச் செய்தியை மறுத்துள்ளது. இந்நிலையில் தற்போது சியோமி எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கிரேட் வால் மோட்டார்ஸ்
இதுகுறித்து சியோமி மற்றும் கிரேட் வால் மோட்டார்ஸ் எவ்விதமான அறிவிப்புகளையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சமீபத்தில் கிரேட் வால் மோட்டார்ஸ் சீன பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையிலும் இந்தக் கூட்டணி குறித்து எவ்விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

பங்குகள் அதிரடி வளர்ச்சி
இரு நிறுவனங்களிடம் இருந்து எவ்விதமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சியோமி நிறுவன பங்குகள் 6.3 சதவீதமும், கிரேட் வால் மோட்டார்ஸ் 10.4 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அதிரடி வளர்ச்சியின் மூலம் இந்நிறுவன முதலீட்டாளர்கள் இத்திடம் குறித்து மிகவும் ஆர்வமாக இருப்பது உணரப்படுகிறது.

சியோமி எலக்ட்ரிக் கார்
தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி சியோமி தனது சொந்த பிராண்டில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காகச் சீனாவில் இருக்கும் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு தொழிற்சாலையைப் பயன்படுத்தப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

சியோமியின் கூட்டணி
கிரேட் வால் மோட்டார்ஸ் இதுவரை யாருடைய கூட்டணியும் இல்லாமல் இயங்கி வரும் நிலையில் சியோமியின் கூட்டணி கோரிக்கையை எப்படிக் கையாளப்போகிறது என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது. மேலும் இரு நிறுவனங்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை அடுத்த சில வாரத்தில் முடிவடைந்து இறுதி முடிவு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

லாப அளவீடுகள்
சியோமி உலகம் முழுவதும் அதிகளவிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து அதிகளவிலான வர்த்தகச் சந்தையைக் கொண்டு இருந்தாலும், இந்நிறுவனத்தின் விற்பனை மூலம் கிடைக்கும் லாப அளவீடுகள் என்பது மிகவும் குறைவு. இதைச் சரி செய்ய நீண்ட காலமாகத் திட்டமிட்டு வருகிறது சியோமி.

சியோமி தலைவர் லேய் ஜூன்
இந்நிலையில் லேய் ஜூன் தலைமையிலான சியோமி வன்பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் நிலையில் எலக்ட்ரிக் கார் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் சிறந்து விளங்க முடியும் என நம்புகிறது. சியோமி-யால் எலக்ட்ரிக் கார் துறையில் வெற்றி பெற முடியுமா..? உங்கள் கருத்து என்ன..?