அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு, வெளிநாட்டவர்களுக்குச் செல்லும் வேலைவாய்ப்புகளைக் குறைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஹெச்1பி மற்றும் எல்1 விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகள், தேர்வு முறையில் மாற்றங்கள் எனப் பல தடைகளை விதித்து வந்த காரணத்தால் பல லட்சம் இந்தியா ஐடி ஊழியர்கள் அமெரிக்காவில் வேலை செய்யும் வாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜோ பைடன் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே டிரம்ப் விதிக்கப் பல கட்டுப்பாடுகளை ரத்து செய்த நிலையில் தற்போது முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விசா வழங்கும் முறை
அமெரிக்காவில் பணியாற்றச் செல்லும் இந்தியர்களின் விண்ணப்பங்கள் குவிந்திருக்கும் இதேவேளையில் அமெரிக்கச் சந்தையில் திறமையான ஊழியர்களின் தேவை அதிகமாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் பைடன் அரசு இந்தப் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்ற முடிவில், டிசம்பர் 31 வரையில் பழைய விசா வழங்கும் முறையே தொடரும் என அறிவித்துள்ளது.

ஐடி ஊழியர்கள்
அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பு இந்திய ஐடி ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஏற்கனவே விசா விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்குப் புதிய விசா கட்டுப்பாடுகள் கீழ் விசா பெறும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்த நிலையில், தற்போது பழைய முறையில் விசா வழங்கும் முறை நடைமுறைக்கு வரும் காரணத்தால் 80 முதல் 90 சதவீதம் விசா பெற வாய்ப்புகள் உள்ளது.

டிசம்பர் 31 வரை தடை
அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி வெளியிட்டுள்ள தகவல்கள் படி டிரம்ப் அரசு அறிமுகம் செய்த அதிகச் சம்பளம் வாங்குவோருக்கு மட்டுமே விசா வழங்க வேண்டும் என்ற புதிய தேர்வு முறை மார்ச் 9ஆம் தேதி அமலாக்கம் செய்யத் திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது டிசம்பர் 31 வரையில் அமலாக்கம் செய்யத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

லாட்டரி முறை
இதன் மூலம் அதிகச் சம்பளம் வாங்குவோருக்கு மட்டுமே அளிக்கப்படும் ஹெச்1பி விசா முறையை மாற்றி ஏற்கனவே புழக்கத்திலிருந்த லாட்டரி முறையை மீண்டும் அமலாக்கம் செய்யப்படுகிறது. இந்தப் பழைய லாட்டரி முறை வருகிற டிசம்பர் 31 வரையில் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பைடன் அரசு
அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், அமெரிக்க ஊழியர்களைக் கொண்டு வர்த்தகம் செய்வது அதிகளவிலான நிதி செலவுகளை ஏற்படுத்துகிறது, இதனால் வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போகும் நிலை உருவாகியுள்ளது எனப் பைடன் அரசிடம் கோரிக்கை வைத்த காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

குறு மற்றும் நடுத்தர ஐடி நிறுவனங்கள்
பைடன் அரசின் இந்த முடிவு அமெரிக்காவில் இருக்கும் குறு மற்றும் நடுத்தர ஐடி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் அடுத்த 11 மாதங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் வர்த்தகம் செய்ய முடியும்.

ஹெச்4 விசா கட்டுப்பாடுகள்
சில வாரங்களுக்கு முன்பு டிரம்ப் அரசு ஹெச்4 விசாவில் விதித்த கட்டுப்பாடுகளைப் பைடன் அரசு ரத்து செய்து அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தியது மறந்து விடக்கூடாது.
ஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து.. ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை.. இந்தியர்கள் மகிழ்ச்சி..!