ஜப்பான் நாட்டின் பங்குச்சந்தை குறியீடான நிக்கி திங்கட்கிழமை வர்த்தகத்தில் சுமார் 30 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக 30,000 புள்ளிகளை அடைந்து சாதனை படைத்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் நிலவிய நிலையான வளர்ச்சி, ஜப்பான் சந்தையில் தொடர்ந்து குவியும் அன்னிய முதலீடுகள், ஜப்பானில் இருக்கும் நிறுவனங்களின் சிறப்பான காலாண்டு முடிவுகள், ஜப்பானின் முதல் கொரோனா தடுப்பு மருந்து தன் நாட்டு மக்களுக்கு அளிக்க ஒப்புதல் ஆகிய அனைத்தும் சேர்ந்து 225 நிறுவனங்கள் இருக்கும் ஜப்பான் நிக்கி குறியீடு 30,000 புள்ளிகளை 30 ஆண்டுகளுக்குப் பின் அடைந்துள்ளது.

ஜப்பான் பொருளாதாரக் குமிழி
1986 முதல் 1991ல் ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்கொண்டது. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்சந்தையில் மதிப்பீடு இயல்பு நிலையை விடவும் மிகவும் அதிகமான விலைக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காரணத்தால் பொருளாதாரக் குமிழி வெடித்தது. இதன் எதிரொலியாக ஜப்பான் பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டது.

ஜப்பான் நிக்கி குறியீடு
1950 முதல் இயங்கும் ஜப்பான் நிக்கி குறியீட்டில், இந்நாட்டின் முன்னணி மற்றும் அரசுத் துறையைச் சார்ந்த 225 நிறுவனங்கள் உள்ளது. டிசம்பர் 29, 1989ல் ஜப்பான் நிக்கி குறியீடு 38,957.44 புள்ளிகள் என்ற வரலாற்று உச்சத்தில் இருந்தது, பொருளாதாரக் குமிழி வெடித்த பின்பு அடுத்த 20 வருடத்தில் 7,054 புள்ளிகளுக்குச் சரிந்தது.

மாபெரும் வீழ்ச்சி
1980 முதல் 1990 வரையில் மட்டும் ஜப்பான் நிக்கி குறியீடு சுமார் 6 மடங்கு வளர்ச்சி அடைந்தது. ஆனால் அடுத்த 20 வருடத்தில் ஏற்பட்ட தொடர்ந்து சரிவின் காரணமாக 2009 மார்ச் மாதத்திற்குள் சுமார் 81.9 சதவீத சரிவு ஏற்பட்டது. இந்த மாபெரும் சரிவில் இருந்து தற்போது மீண்டு மீண்டும் 30,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.

பிப்ரவரி 2020
பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஜப்பான் நிக்கி குறியீடு 6 சதவீதம் வளர்ச்சி அடைந்து திங்கட்கிழமை வர்த்தகத்தில் 30,006.46 புள்ளிகளை அடைந்து, மாபெரும் சரிவுக்குப் பின் நிலையான வளர்ச்சி முறையான வர்த்தகம் என முதலீட்டாளர்கள் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஜப்பான் பங்குச்சந்தையின் நிக்கி குறியீடு 30,000 புள்ளிகளைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி
கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வரும் உலகப் பொருளாதாரங்களில் ஜப்பான் மிகவும் முக்கியமானதாகத் திகழ்கிறது. டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ஜப்பான் பொருளாதாரம் 3 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 12.7 சதவீதமாக உள்ளது.