கொரோனா வைரஸின் கொடூர தாண்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் 1,00,000 பேருக்கு மேல் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இன்னும் கொரோனா வைரஸ் நோய் பரவல் பெரிய அளவில் கட்டுபடுத்தப்படவில்லை. இறப்புகளும் குறைந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் இந்த கொரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் மட்டும், நாளுக்கு நாள், கண் எதிரே அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

சர்வே
கடந்த ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 13 வரை உலகின் பல பகுதிகளில் இருக்கும் 347 ரிஸ்க் மேனேஜர்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அந்த சர்வேயை உலக பொருளாதார ஃபாரம் (World Economic Forum) மற்றும் மார்ஷ் & மெக்லெனன் கம்பெனி இன்க், சுரிச் இன்சூரன்ஸ் குழுமம் ஆகியோர்கள் தொகுத்து இருக்கிறார்கள்.

அதிர்ச்சி தகவல்
அந்த சர்வேயில், ரிஸ்க் மேனேஜர்கள், இந்த கொரோனா வைரஸால், உலக பொருளாதாரத்தில் ஒரு பெரிய ரெசசன் வர இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அந்த ரெசசன் நீண்ட நாட்களுக்கு இருக்கும் எனவும் சொல்லி எச்சரித்து இருக்கிறார்கள்.

பிரச்சனை
சர்வேயில் பங்கு எடுத்த பாதிக்கும் மேற்பட்ட ரிஸ்க் மேனேஜர்கள்
1. தொழில் துறையினர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திவால் ஆவது,
2. தொழில் துறை ஒருங்கிணைவது,
3. தொழில் துறை மீண்டு வருவதில் தோல்வி அடைவது,
4. பயங்கரமாக அதிகரிக்கும் வேலை இல்லா திண்டாட்டம்... போன்ற பிரச்சனைகளை வரலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஏற்கனவே இதில் பல விஷயங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன.

உலக பொருளாதார ஃபாரம்
"கொரோனா வைரஸ் பலரின் வாழ்கையையும், வாழ்வாதாரத்தையும் அழித்து இருக்கிறது. அதோடு கொரோனா ஒரு பொருளாதார நெருக்கடியைக் கொண்டு வந்து இருக்கிறது. இந்த பொருளாதார நெருக்கடி பல தாக்கங்களை ஏற்படுத்தும். அதோடு கடந்த காலத்தில், நம் பொருளாதாரத்தில் இருந்த குறைகளையும் வெளிப்படுத்தி இருக்கிறது" என்கிறார் உலக பொருளாதார ஃபாரத்தின் நிர்வாக இயக்குநர் சாதியா சஹிதி (Saadia Zahidi).

வாய்ப்பு
கொரோனா வைரஸ் போல, எதிர்காலத்தில் வர இருக்கும் பிரச்சனைகளை தாக்கு பிடிக்கக் கூடிய, வலுவான பொருளாதாரத்தை, எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தாரத்தை கட்டமைக்க, நமக்கு கிடைப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார் உலக பொருளாதார ஃபாரத்தின் நிர்வாக இயக்குநர் சாதியா.