ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது போர் தொடுக்க அறிவிப்பு வெளியானதில் இருந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல், விமானப் படை தாக்குதல்களைச் செய்து சில மணிநேரத்தில் பல உக்ரைன் ராணுவ தளத்தை அழித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டிற்குள் செல்லும் ராணுவ விமானங்களின் வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வரும் வேளையில், ரஷ்ய பங்குசந்தை மற்றும் ரஷ்யாவின் நாணய மதிப்பு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
சாமானிய மக்களை பதம் பார்க்கப்போகும் விலை வாசி.. உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தால் பெரும் இன்னல்கள்!

விளாடிமிர் புதின் போர் அறிவிப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான போர் அறிவிப்பைத் தொடர்ந்து ரஷ்ய பங்குச்சந்தைகள் மோசமான சரிவை எதிர்கொண்டதால் மாஸ்கோ எக்ஸ்சேஞ்ச் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை முடக்கப்பட்டது.

இரு பங்குச்சந்தைகள்
ரஷ்யாவின் இரு பங்குச்சந்தைகளும் மூட முக்கியமான காரணம் ரஷ்ய நாணயத்தின் மதிப்பு மோசமான சரிவை எதிர்கொண்டது. இதனால் முதலீட்டாளர்களின் பணத்தைப் பாதுகாக்க மாஸ்கோ எக்ஸ்சேஞ்ச் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பங்குச் சந்தைகள் மூடப்பட்டது.

50 சதவீத சரிவு
பங்குச்சந்தை முடக்கத்திற்குப் பின் இன்று மாலையில் மாஸ்கோ பங்குச்சந்தை வர்த்தகத்தைத் துவங்கிய நிலையில் 50 சதவீத சரிவை பதிவு செய்து வர்த்தகம் முடிவடைந்துள்ளது. RTS குறியீடு 49.93 சதவீதமும், MOEX குறியீடு 45.21 சதவீதமும் சரிந்துள்ளது.

முக்கிய நிறுவனம்
வர்த்தக முடக்கத்திற்குப் பின் துவங்கிய மாஸ்கோ பங்குச்சந்தையில் சந்தை மதிப்பீட்டின் படி ரஷ்யாவின் மிகப்பெரிய நிறுவனங்களாக இருக்கும் காஸ்ப்ரோம் 54 சதவீதம் சரிந்து 129.50 ரூபிள் ஆக உள்ளது. இதேபோல் ரோஸ் நேபிட் 59 சதவீதம் குறைந்து 178.65 ரூபிள். நோவாடெக் 48 சதவீதம் குறைந்து 702.80 ரூபிள் ஆகவும், Sberbank 57 சதவீதம் சரிந்து 89.59 ரூபிள் ஆகும். லுகோயில் 47 சதவீதம் சரிந்து 3,173.50 ரூபிள் ஆகவும் உள்ளது.

ரூபிள் மதிப்பு
உக்ரைன் மீதான போர் அறிவிப்புக்கு பின்பு அமெரிக்க டாலருக்கு எதிரான ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு ஜனவரி 2016ல் எதிர்கொண்ட 84 ரூபிள் என்ற வரலாற்று சரிவையும் தாண்டி இன்று 86.21 ரூபிள் ஆகச் சரிந்துள்ளது. இதேபோல் யூரோவுக்கு எதிரான ரூபிள் மதிப்பு 96.60 ஆக சரிந்துள்ளது.

மாஸ்கோ எக்ஸ்சேஞ்ச்
ரூபிள் மதிப்பின் சரிவை தொடந்து மாஸ்கோ எக்ஸ்சேஞ்ச் அமைப்பு , பங்குச் சந்தை அடுத்த அறிவிப்பு வரும் வரையில் மூடப்படும் என அறிக்கை வெளியிட்டது. இதேபோல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பங்குச் சந்தையும் அடுத்தச் சில மணிநேரத்தில் அறிவிப்பை வெளியிட்டது.

முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் ரஷ்யாவின் உணவு சில்லறை விற்பனையாளர் Magnit (-14.51%), மொபைல் நெட்வொர்க் MTS (-14.09%), சுரங்க நிறுவனம் Nornickel (-12.39%), மற்றும் எனர்ஜி கார்ப்பரேஷன் Gazprom (-11.50%), இன்னும் பல முன்னணி நிறுவனங்கள் மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்டது.

மும்பை பங்குச்சந்தை
ரஷ்யாவின் போர் அறிவிப்பின் எதிரொலியால் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 2702.15 புள்ளிகள் சரிவில் 54,529.91 புள்ளிகளை அடைந்தது. சென்செக்ஸ் வரலாற்றிலேயே 4வது மோசமான வர்த்தகத்தை இன்று பதிவு செய்துள்ளது. நிஃப்டி குறியீடு 815.30 புள்ளிகள் சரிந்து 16,247.95 புள்ளிகளை அடைந்தது.