கொரோனா வைரஸ், உலகின் வர்த்தகத்தையும், வியாபாரத்தையும் முடக்கிவிட்டது. பார்மா துறை சார்ந்த பொருட்களை தயாரிப்பதற்கு கூட சில சிரமங்களை எதிர் கொள்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்படி இருக்கும் போது, உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில், தாதாவாக இருக்கும் ஒரு நாடு தான் சவுதி அரேபியா. உலகின் 2-வது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்.
அந்த நாட்டிலேயே, கொரோனா வைரஸ், மக்கள் மனதில் என்ன மாதிரியான பயத்தை விதைத்து இருக்கிறது? தெரிந்து கொள்வோமே!

சர்வே
கலீஜ் டைம்ஸ் (Khaleej Times) என்கிற பத்திரிகை YouGov என்கிற ஒரு சர்வே முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் பல கேள்விகளுக்கு, சவுதி அரேபிய மக்கள், சில தகவல்களைச் சொல்லி நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். அந்த சர்வே விவரங்களைத் தான் இப்போது பார்க்க இருக்கிறோம். அதோடு இந்த சர்வே விவரங்கள் UAE எனப்படும் ஐக்கிய அரபு நாடுகளிலும் எடுத்து இருக்கிறார்கள். ஆக அந்த சர்வே கேள்விகளுக்கு UAE மக்களும் என்ன பதில் சொல்லி நமக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

வேலை சம்பளம்
இந்தியா போன்ற பல நாட்டு மக்களுக்கு கணிசமாக வேலை கொடுத்துக் கொண்டு இருக்கும் சவுதி அரேபியாவில் வாழும் மக்களே, தங்களின் வேலை போய்விடுமோ அல்லது சம்பளத்தில் கை வைத்து விடுவார்களோ என 38 % பேர் பயப்படுகிறார்களாம். ஐக்கிய அரபு நாட்டு (UAE) மக்கள் 64% பேருக்கு இந்த பயம் இருக்கிறதாம்.

நீண்ட நாட்கள்
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாட்டில் சுமார் 49 சதவிகிதம் பேர் தங்கள் வேலை தொடர்பான பிரச்சனைகள் நீண்ட நாட்களுக்கு இருக்கும் என்கிறார்களாம். சுமார் 46 சதவிகிதம் பேர் தங்களின் சம்பளம் மற்றும் கூலி தொடர்பான சிக்கல்கள் நீண்ட நாட்களுக்கு இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

உலக பொருளதாரத்தில் பாதிப்பு
இந்த கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என 43 % சவுதி அரேபியர்கள் நினைக்கிறார்கள். ஐக்கிய அரபு நாட்டு மக்களும் அதை உறுதி செய்யும் விதத்தில் 56 % பேர், இந்த கொடூர கொரோனாவால் உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் எனச் சொல்கிறார்கள்.

நஷ்டம்
வாங்கி வைத்திருக்கும் சொத்து பத்துக்களின் விலை சரிவு, முதலீடுகள் நஷ்டம் அடைவது போன்ற பிரச்சனைகள் இருக்கும் என 32 % சவுதி அரேபிய மக்கள் சொல்கிறார்கள். இவர்களை விட அதிகமாக, 48 % UAE மக்கள் தங்கள் சொத்து பத்துக்கள் மற்றும் முதலீடுகள் பாதிப்பு அடையும் என்கிறார்கள்.

வெளிநாட்டவர்கள் கவலை
UAE நாட்டில் வேலை பார்க்கும் மேற்கத்தியர்களில் 74 % பேருக்கு தங்கள் வேலை பறி போய்விடும் என்கிற பயம் இருக்கிறதாம். UAE-ல் வேலை பார்க்கும் 68 % ஆசியர்களுக்கும் வேலை பயம் இருக்கிறதாம். சவுதியில் வேலை பார்க்கும் வெளிநட்டவர்களில் 56 % பேருக்கு தங்கள் வேலை குறித்த பயம் உச்சத்தில் இருக்கிறதாம்.

செம அடி
ஏற்கனவே, இந்த கொடூரமான கொரோன வைரஸ் பிரச்சனையால், உலக அளவில் கச்சா எண்ணெய்க்கான டிமாண்ட் சரியத் தொடங்கி இருக்கிறது. இதனால் WTI கச்சா எண்ணெய் ஃப்யூச்சர்ஸ் விலை சமீபத்தில் 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டது நினைவு கூறத்தக்கது.

தெரியவில்லை
இப்படி உலகின் அத்தியாவசியத் தேவையான கச்சா எண்ணெய் தயாரிக்கும் சவுதி அரேபியாவிலேயே இது தான் கதி என்றால், நம்மைப் போல இந்திய நாட்டில் வேலை பார்ப்பவர்களின் நிலை என்ன ஆகும்? எத்தனை பேர் தங்கள் வேலையை இழப்பார்கள்? கூலித் தொழிலாளர்களுக்கு என்று மீண்டும் வேலை கிடைக்கும்? விடை தெரியவில்லை.