உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு எதிரான சூழ்நிலையில் உருவாக்கி வரும் நிலையிலும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகப் பிட்காயின் மதிப்பு கிட்டதட்ட 53,000 டாலர் அளவீட்டைத் தொடும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 52,954 டாலர் என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது.
இந்நிலையில் பிட்காயின் முதலீட்டாளர்களும் சமீபத்தில் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்த டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் பணத்தை விடப் பிட்காயின் மேல் என்று தனது டிவிட்டர் கணக்கில் டிவீட் செய்துள்ளார்.

பினான்ஸ் சிஇஓ
உலகின் முன்னணி கிரிப்டோ வர்த்தகத் தளமான பினான்ஸ்-ன் சிஇஓ Changpeng Zhao அளித்த பேட்டியில், எலான் மஸ்க் டோஸ்காயினுக்கு ஆதரவு அளித்துக்கொண்டு இருப்பது வியப்பு அளித்தாலும், அவருடைய டெஸ்லா நிறுவனம் பிட்காயினில் தான் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது, டோஜ்காயினில் முதலீடு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் டிவீட்
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க் தனது டிவிட்டரில், என்னுடைய கருத்து அனைத்தையும் டெஸ்லா பிரதிபலிக்காது. கையில் முட்டாள்தனமாகப் பணத்தை வைத்திருப்பதை விடவும் பிட்காயின் வைத்திருப்பது மேல். இதுமட்டும் அல்லாமல் பிட்காயின் முதலீடு என்பது S&P நிறுவனத்திற்குத் துணிகரமான செயலாக நான் பார்க்கிறேன்.

நான் ஒரு இன்ஜினியர்
இதேபோல் நான் ஒரு முதலீட்டாளர் இல்லை, நான் ஒரு இன்ஜினியர். டெஸ்லா நிறுவனப் பங்குகளைத் தவிர வேறு நிறுவனங்களில் நான் முதலீடு செய்யவோ, வைத்துக்கொள்ளவோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முட்டாள்கள்
அனைத்திற்கும் மேலாகப் பணத்தின் மதிப்புத் தற்போது தொடர்ந்து குறைந்து வரும் போது முட்டாள்கள் தான் மாற்று வழிகளைத் தேடாமல் இருப்பார்கள். பிட்காயின் பணத்திற்கு இணையான ஒன்று எனவும் அடுத்தடுத்த டிவீட்டில் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா முதலீடு
35,000 டாலரில் வர்த்தகம் செய்யப்பட்ட பிட்காயின் மதிப்பு இன்று கிட்டதட்ட 53,000 டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளதிற்கு மிகவும் முக்கியக் காரணம் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனத்தின் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடு தான் அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. மேலும் பேபால் நிறுவனத்தைப் போல் டெஸ்லாவும் பிட்காயினைப் பேமெண்ட் முறையாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.