அமெரிக்காவில் டிரம்ப் அரசு அறிவித்திருந்த ஹெச்1பி விசா உரிமையாளர்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஜோ பைடன் அரசின் புதிய அறிவிப்புக்காகக் காத்திருந்த கோடிக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்களுக்குக் குட் நியூஸ்.
பைடன் அரசு அமெரிக்கா வரும் வெளிநாட்டவர்கள் மீது முந்தைய ஆட்சி விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கிய நிலையில், ஹெச்1பி விசா உரிமையாளர்கள் மீது விதிக்கப்பட்ட தடை மட்டும் நீக்காமல் இருந்தது.
இதனால் பெரும் கவலையில் இருந்து கோடிக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்களுக்குச் சாதகமாக மார்ச் 31 வரையில் ஹெச்1பி விசா மீது இருந்த தடை காலம் முடிந்த பின்பு எவ்விதமான புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதிக்காமல் பழைய லாட்டரி முறையில் ஹெச்1பி விசாவை வழங்கும் வகையில் வழிசெய்துள்ளார் ஜோ பைடன்.

கொரோனா தொற்று
அமெரிக்காவில் கொரோனா தொற்றுக் காரணமாக லாக்டவுன் அறிவித்த போது பல கோடி அமெரிக்கர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்தனர். இதனால் அப்போது அதிகாரத்தில் இருந்து டொனால்டு டிரம்ப் தற்காலிக வேலைவாய்ப்பு விசா பிரிவின் கீழ் விண்ணப்பம் செய்தவர்கள், விசா வைத்துள்ளவர்கள் அமெரிக்கா வரத் தடை விதித்தார்.

தடை காலம் நீட்டிப்பு
டிசம்பர் 31 வரையில் விதிக்கப்பட்ட இந்தத் தடை டிரம்ப் நிர்வாகம் மார்ச் 31 வரையில் நீட்டித்தது. இதனால் விசா வைத்திருந்தாலும், விசா புதிதாகப் பெற்று இருந்தாலும் அமெரிக்கா செல்ல முடியாமல் பல கோடி மக்கள் தவித்து வந்தனர்.

தடை உத்தரவில் நடவடிக்கை இல்லை
பைடன் ஆட்சிக்கு வந்த உடனேயே இந்தத் தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தத் தடை உத்தரவு குறித்து எவ்விதமான முடிவையும் அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் அமெரிக்காவில் பணியாற்றக் காத்திருக்கும் கோடிக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் சோகத்தில் இருந்தனர்.

மார்ச் 31 வரை தடை
மார்ச் 31 வரையில் இருந்து தடை உத்தரவு முடிவடைந்த நிலையில் தடை காலத்தை நீட்டிப்பதோ, கட்டுப்பாடுகளை விதிப்பதோ என எந்த அறிவிப்பும் இல்லாமல் பழைய நடைமுறை அப்படியே திரும்ப வந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இது சாதகமாக அமைந்துள்ளது.

ஹெச்1பி விசா விண்ணப்பங்கள்
மேலும் இந்த ஆண்டுக்கான ஹெச்1பி விசா விண்ணப்பங்களையும் அமெரிக்கக் குடியுரிமை அமைப்பு ஆய்வு செய்யத் துவங்கியுள்ள நிலையில் புதிதாக 65,000 பேருக்கு அடுத்த சில மாதத்தில் ஹெச்1பி விசா கிடைக்கும்.
இதனால் இந்தியாவில் இருந்து 2021ல் அதிகப்படியான ஊழியர்கள் அமெரிக்கா செல்ல வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

பைடன் அரசின் முக்கியப் பணிகள்
பைடன் அரசு டிரம்ப் விதித்த சம்பள அடிப்படையிலான விசா வழங்கும் முறையை நீக்கியுள்ளார், சில நாடுகள் மீது விதிக்கப்பட்டு இருந்த பயணத் தடையை நீக்கியுள்ளார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்வு செய்ய ஆலோசனை செய்து வருகிறார். பைடனின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்கா உடனான நட்புறவு பிற நாடுகளுடன் மேம்படுகிறது.