அமெரிக்காவின் 46வது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பிடன் ஆட்சியில் சீனா மீது அமெரிக்க அரசின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது தான் தற்போது உலக நாடுகளில் முக்கிய விவாதமாக விளங்குகிறது. இதுமட்டும் அல்லாமல் டிரம்ப் அரசைப் போலவே பிடன் அரசும் சீனா மீது தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பு
டொனால்டு டிரம்ப் ஆட்சியில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதீத வரி விதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. அமெரிக்க அரசின்
உத்தரவுக்கு எதிராகச் சீனா அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது அதிகளவிலான வரியை விதித்தது. இதனால் இரு நாடுகள் மத்தியிலும் வர்த்தகப் போர் மூண்டது அனைவரும் அறிந்ததே.
உலகின் இரண்டு பெரும் பொருளாதார நாடுகள் மத்தியில் நடந்த இந்த வர்த்தகப் போர் மூலம் உலகின் பல நாடுகளின் வர்த்தகமும், நாணய மதிப்பும் அதிகளவில் பாதிக்கப்பட்டது.

கொரோனா தொற்று
இந்த வர்த்தகப் போர் பிரச்சனை தணியும் நேரத்தில் தான் கொரோனா தொற்றுச் சீனாவில் இருந்து பரவி உலகம் முழுவதும் பரவி உலக மக்களை வாட்டி வதைத்தது. கொரோனா பரவலுக்குச் சீனா தான் காரணம் என நேரடியாகவே டிரம்ப் குற்றம்சாட்டிய நிலையில் இரு நாடுகளுக்கும் மத்தியிலான நட்புறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

சீன நிறுவனங்கள் மீது தடை
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் வர்த்தகம் செய்தும் சீன நிறுவனங்கள் சீன ராணுவத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், இந்த நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவில் திரட்டும் முதலீட்டைச் சீன ராணுவத்தின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்துகிறது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வர்த்தகம் செய்யத் தடை விதித்தது டிரம்ப் அரசு.

முதலீட்டு ஈர்ப்பு
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் சீன நிறுவனங்கள் பங்குகளை அல்லது பத்திரங்களை விற்பனை முதலீட்டு ஈட்ட வேண்டும் என்றால் அமெரிக்க அரசின் நிதியியல் கணக்கியல் அமைப்பின் நிறுவன கணக்கு தணிக்கைக்குப் பின்பு தான் முதலீட்டை ஈட்ட வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டையும் டிரம்ப் அரசு விதித்தது.

ஜோ பிடன் நிலைப்பாடு
இப்படி டிரம்ப் ஆட்சியில் சீனா மீதும், சீன நிறுவனங்கள் மீதும் அடுத்தடுத்து பல்வேறு தடைகளையும் விதித்து வந்த நிலையில், ஜோ பிடன் சீனா உடனான பிரச்சனையை அதிரடியாகக் கையாளவோ அல்லது தொடர்ந்து கட்டுப்பாடுகளை
விதிப்பதோ அல்லது டிரம்ப் விதித்த தடை மற்றும் கட்டுப்பாடுகளை ரத்து செய்யவோ திட்டமிடவில்லை. இதற்கு மாறாக ஜோ பிடன் பொறுமையாக பிரச்சனைகளைக் கையாள முடிவு செய்துள்ளார்.

இந்தியாவிற்கு லாபம்
இதனால் சீனா மற்றும் சீன நிறுவனங்களைக் குறிவைத்து விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் ரத்து செய்யப்படாது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் சீனாவிற்கும் சீன நிறுவனங்களுக்குச் செல்லும் முதலீடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் இந்தியாவும் தற்போது சீனாவைப் போல் உற்பத்தித் துறையில் அதிகக் கவனத்தைச் செலுத்தும் காரணத்தால் முதலீடு அதிகளவில் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.