மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வெள்ளிகிழமை முடிவடைந்த ரூ.71.64 என்ற நிலையில் இருந்து, இன்று 30 பைசாக்கள் குறைந்து ரூ.71.94 ஆக வர்த்தக தொடக்கத்தில் தொடங்கியது.
இந்த நிலையில் இந்திய பங்கு சந்தைகளின் வீழ்ச்சி, அமெரிக்க நாணயத்தின் வலுவான மதிப்பு ரூபாயின் மதிப்பை மேலும் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்றே கூறலாம்.
இது தவிர சீனாவில் நிலைகொண்டுள்ள கொரொனாவின் பதற்றமான நிலைக்கு மத்தியில், சர்வதேச முதலீட்டாளர்கள் நம்பிக்கை முதலீடுகளில் கொஞ்சம் குறைவாகவே இருந்து வருகிறது.

அதிகரித்து வரும் பாதிப்பு
குறிப்பாக சொல்லவேண்டுமானால் சீனாவின் தொற்று வைரஸான கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த கொரோனாவினால் இதுவரை 2,592 பேர் பலியாகியுள்ளதாகவும், இதே போல் இதுவரை 77,150 பேருக்கு இந்த தாக்கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது கொஞ்சம் நல்ல விஷயம்
எனினும் இதில் கொஞ்சம் நல்ல விஷயம் என்னவெனில் கச்சா எண்ணெய் விலை குறைவானது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சற்று கட்டுப்படுத்தியது என வர்த்தகர்கள் கூறியுள்ளனர். இது ரூபாய் மேலும் வீழ்ச்சியடையாமல் ஆதரவளித்துள்ளது என்றே கூறலாம். ஆக இனியும் இந்த வீழ்ச்சியை இது கட்டுப்படுத்தும் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

ரூபாய் வீழ்ச்சி இதனால் தான்
சீனாவில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தொடர்ந்து அந்த அச்சத்திலேயே உள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனால் பாதுக்காப்பு கருதி தங்களது முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். மேலும் செய்த முதலீடுகளையே சிலர் எடுக்க தொடங்கியுள்ளனர். இதனாலேயே இன்று காலையிலேயே ரூபாயின் மதிப்பு 71.94 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
இதற்கிடையில் உலகளாவிய அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3.69% வீழ்ச்சி கண்டு 55.81 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இதே டபள்யூ டி ஐ கச்சா எண்ணெய் விலை 3.62% வீழ்ச்சி கண்டு 51.45 டாலராகவும் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

இந்திய பங்கு சந்தையும் வீழ்ச்சி
இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 689 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 40,480 ஆக வர்த்தமாகி வருகிறது. இதே போல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 216 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,864 ஆக வர்த்தகமாகி வருகிறது. இது இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்தது எனலாம். எனினும் சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் ரூபாய் மதிப்பு இன்னும் எவ்வளவு வீழ்ச்சி காணும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.