இத்தாலி நாட்டு அரசியல் பிரச்சனைகள் வெடித்துள்ள நிலையில் ஐரோப்பிய சந்தையில் மந்தமான வர்த்தகச் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் வாயிலாக ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

மும்பை பங்குச்சந்தை
இதன் காரணமாக இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் 200 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை மதிய நேர வர்த்தகத்தில் சரிவில் இருந்து கணிசமான அளவிற்கு மீண்டது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இதன் வாயிலாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 43.13 புள்ளிகள் சரிந்து 34,906.11 புள்ளிகளை அடைந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 18.95 புள்ளிகள் சரிந்து 10,614.35 புள்ளிகளை அடைந்தது.

அதிரடி உயர்வு
புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் 3.08 சதவீதமும், கோல் இந்தியா 2.34 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து யெஸ் வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.

சரிவில் முக்கிய நிறுவனங்கள்
மேலும அதானி போர்ட்ஸ், டாக்டர் ரெட்டி, எல் அண்ட் டி, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்துள்ளது.