2020ல் பெரும்பாலான உலக நாடுகள் மோசமான பொருளாதார மந்த நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் பல நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமல் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் நிகழ்ந்தது.
இப்படிப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல பொருளாதார வல்லுனர்கள், வேலைவாய்ப்பு சந்தை ஆய்வாளர்கள் 2020 Recession-ஐ She-cession எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.
2020ல் இந்தியாவில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த போதே மத்திய அரசு மார்ச் 25ஆம் தேதி நாடு முழுவதும் முடங்கும் அளவிற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் லாக்டவுன் அறிவிப்பை வெளியிட்டது.
இதனால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு மற்றும் பொருளாதாரப் பாதிப்பு வாயிலாகஇந்தியாவில் லாக்டவுன் காலத்தின் முதல் மாதத்தில் மட்டும் சுமார் 1.7 கோடி பெண்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக CMIE அமைப்பின் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் பங்கீடு 4 வருடச் சரிவை அடைந்துள்ளது.
இந்தியாவில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி பாதிப்பால் ஏற்பட்ட வேலைவாய்ப்பு சந்தை பாதிப்பில் இருந்து மீதான வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில் பெண்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்த நிலையில் கொரோனா பாதிப்புப் பெண்கள் கடந்த 4 வருடம் வேலைவாய்ப்புச் சந்தையில் அடைந்த வளர்ச்சியை முழுமையாக இழந்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசு பிப்ரவரி 1ஆம் தேதி அறிவிக்க உள்ள பட்ஜெட் அறிக்கையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்தைக் கட்டாயம் அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. மேலும் பெண்களின் பங்குகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம்.
இதேபோல் பெண்களுக்கான சிறப்புப் பொருளாதாரம் மற்றும் நிதியுதவி திட்டத்தை அறிவிக்கவும் கட்டாயமாகியுள்ளது. இத்தகைய திட்டத்தின் மூலம் அதிகளவிலான பெண்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெறுவது மட்டும் அல்லாமல் தொழில் துவங்கவும் முடியும்.
எனவே MSME நிறுவனங்களுக்கு அளிப்பது போல் சிறப்பு நிதியுதவி திட்டத்தைப் பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பெண்களின் கோரிக்கையைப் பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நிறைவேற்றுவாரா..? பிப்ரவரி 1ஆம் தேதி வரை காத்திருந்து பார்ப்போம்.