பட்ஜெட் எதிரொலி காரணமாகக் கடந்த ஒரு வாரமாக மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் இன்று பங்குச்சந்தை நிலவரம் எப்படியிருக்கும் என்பது தான் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முக்கியக் கேள்வியாக உள்ளது.

பட்ஜெட் 1997-98
இந்தியாவின் ட்ரீம் பட்ஜெட் என் கூறப்படும் 1997-98 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் வருமான வரி அளவீடுகள் 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டது, தொழிற்துறை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரிச் சுமை குறைக்கும் விதமாகக் கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது.

அன்னிய முதலீடு மற்றும் disinvestment முறை
இதுமட்டும் அல்லாமல் 1997-98 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் நடைமுறையில் இருந்த பல்வேறு சர்சார்ஜ் ஆகியவற்றை நீக்கப்பட்டது, மேலும் இந்தியாவில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு செய்யப் பாதை அமைக்கப்பட்டது, முதல் முறையாக அரசு கையிருப்பில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டைத் திரட்டும் disinvestment முறையை முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

7 சதவீதம் வளர்ச்சி
பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் அடங்கிய இந்த 1997-98 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு வாரத்தில் மும்பை பங்குச்சந்தை சுமார் 7 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்தது இன்றளவும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட் 2021-22
2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாகப் பட்ஜெட் எதிரொலி, நம்பிக்கை அளிக்காத பொருளாதார ஆய்வறிக்கை, சர்வதேச வர்த்தகச் சூழ்நிலையில், தொடரும் கொரோனா தொற்று ஆகியவற்றின் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றினர்.

முக்கியத் துறைகள் கடும் பாதிப்பு
இதோடு முக்கிய நிறுவனங்களின் தடாலடி சரிவின் காரணமாகும், ஐடி, வங்கி என முக்கியத் துறை சார்ந்த பங்குகளில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவும் உள்நாட்டு சந்தை முதலீட்டாளர்களும் அதிகளவிலான முதலீட்டை இழந்தனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வர்த்தகச் சரிவின் மூலம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இழந்தனர்.

3,507 புள்ளிகள்
ஜனவரி 20ஆம் தேதி சென்செக்ஸ் குறியீடு 49,792 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை 46,285 புள்ளிகளுக்கு வர்த்தகம் முடிவடைந்துள்ளது. இதனால் கடந்த 6 வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 3507 புள்ளிகள் சரிந்துள்ளது. இதன் மூலம் கிட்டதட்ட கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட வளர்ச்சி முழுமையாக மாயமாகியுள்ளது.