வரா கடன் பிரச்சனைகள் வங்கிகளுக்குத் தலைவலியாக இருக்கும் சமயத்தில் 11,400 கோடு ரூபாய் மோசடி செய்ததாக நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஷி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவது நாடு முழுவதும் பெரிய அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் வங்கிகளில் 1.1 லட்சம் கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றுள்ளதாகவும் அதனை வங்கிகளால் திரும்பப் பெற முடியவில்லை என்று தரவுகள் கூறுகின்றன.

11 கார்ப்ரேட் நிறுவனங்கள்
வரா கடன் வைத்துள்ள 9,000 வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் 11 கார்ப்ரேட் நிறுவனங்கள் 26,000 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு அதனைத் திருப்பி அளிக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

ஜத்தின் மேத்தா
நீரவ் மோடி போன்று வின்சம் டைமண்ட்ஸ் நிறுவனரான ஜத்தின் மேத்தாவும் 5,500 கோடி ரூபாய் வரை பல வங்கிகள் கடன் பெற்று அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை. இந்தியாவில் சட்டங்கள் யாருக்குப் பாதுகாப்பு அளிக்கிறதோ இல்லையோ வரா கடன் வைத்துள்ளவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

விஜய் மல்லையா
கிங்ஃபிஷர் விமானப் போக்குவரத்து நிறுவன உரிமையாளரான விஜய் மல்லையாவும் பல வங்கிகளில் 3,000 கோஇ கடன் பெற்றுவிட்டு இப்போது இங்கிலாந்தில் தஞ்சம்புகுந்துள்ளார். அதற்காக இன்று வரை இந்திய அரசு போராடிக்கொண்டு இருக்கிறது.

சந்திப் ஜுன்ஜுன்வாலா
ஆர்ஈஐ அக்ரோ நிறுவனரான சந்திப் ஜுன்ஜுன்வாலா 2,730 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு அதனை வரா கடனாக வைத்துள்ளார். இதே போன்று மஹுவா மீடியா, பெர்ல் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட், செஞ்சுரி கம்யூனிகேஷன் மற்றும் பிக்சியன் மீடியா பிரைவேட் லிமிடெட் உள்ளிட்டவை 2,416 கோடி ரூபாய் கடனை பெற்றுவிட்டு இன்னும் வரா கடனாக வைத்துள்ளனர்.

நித்தின் காஸ்லிவால்
ரீட் & டெய்லர் (இந்தியா) லிமிடெட் மற்றும் எஸ் குமார்ஸ் நேஷனல்வைட் லிமிடெட் என இரண்டு நிறுவனங்களை நிர்வகித்து வரும் நித்தின் காஸ்லிவாலும் வரா கடன் வைத்துள்ளனர்.

வரா கடன்
ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் வரா கடனால் இந்திய பொருளாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு மட்டும் வரா கடன் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 4 வருடத்தில் மட்டும் 28,417 கோடியாக இருந்த வரா கடன் 1.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.