டெல்லி: இன்று ஜூலை 27, 2019) GST கவுன்சில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான GST வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை வரும் ஆகஸ்ட் 01, 2019-ல் இருந்து குறைப்பதாக முடிவு செய்திருக்கிறார்களாம். இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு இதுவரை 12 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது. அதை வரும் ஆகஸ்ட் 01, 2019 முதல் வெறும் 05 சதவிகிதமாக குறைத்திருக்கிறார்களாம்.
அதே போல மின்சார வாகனங்களுக்குத் தேவையான மின்சார வாகன சார்ஜர்களுக்கான GST வரி இதுவரை 18 சதவிகிதமாக இருக்கிறது. அதையும் வெறும் 05 சதவிகிதமாக குறைத்திருக்கிறது GST வரி விதிப்புகளுக்கு பொறுப்பான GST கவுன்சில். இந்த சார்ஜர்களுக்கு 5 சதவிகிதம் GST என்பது பெரிய பெரிய சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கும் பொருந்துமாம்.
அதே போல் உள்ளூர் அதிகாரிகள் உள்ளூரிலேயே செய்யும் பயணங்களுக்கு, மின்சார பேருந்துகளை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தினால் வரி கிடையாது என்றும் GST கவுன்சில் சொல்லி வயிற்றில் பால் வார்த்து இருக்கிறார்களாம். ஆனால் ஒரு மின்சார பேருந்து என்பது 12 பேருக்கு மேல் அழைத்துக் கொண்டு போவதாக இருக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்களாம்.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் போன்ற மரபுசார் எரிபொருட்கள் பயன்பாட்டைக் குறைக்கவும், எலெக்ட்ரிக் வாகனங்களை ஆதரிக்கவும் தான் இந்த புதிய GST வரி குறைப்பாம். 2005-ம் ஆண்டில் வெளியிட்ட கார்பன் அளவுகளில், 33 - 35 சதவிகித கார்பன் வெளியிடுகளை வரும் 2030-க்குள் குறைத்துக் கொள்வதாக சொல்லி இருந்தது இந்தியா. அதோடு 40 சதவிகித மின்சார சக்தி மரபு சாரா ஆற்றல்களில் இருந்து தயாரிக்கப்பட வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
இப்போது இந்தியாவின் எரிசக்தி கொள்கை, புதிய அமைப்புசாரா ஆற்றல்களை அதிகரிப்பது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அமைப்பு சார் ஆற்றல்களைக் குறைப்பது, அதோடு அனைத்து இந்தியர்களின் வாழ்வை மேம்படுத்த, அனைவருக்கும் மின்சாரம் வழங்குவது என பல பக்கம் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2019 - 20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூட புதிதாக எலெக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்களுக்கு சுமார் 1.5 லட்சம் ரூபாய் வட்டிக்கு தள்ளுபடி வழங்கப்படும் எனச் சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எலெட்க்ரிக் வாகனங்கள் மீதான GST வரியைக் குறைத்திருப்பதை பல தரப்பினர்களும் வரவேற்றிருக்கிறார்கள்.