தற்போது இந்தியப் பொருளாதாரத்துக்கும் சரி, மத்திய அரசுக்கும் சரி கொஞ்சம் நேரம் சரி இல்லை போலிருக்கிறது.
நேற்று வெளியான நுகர்வோர் பணவீக்கம் 5.54 சதவிகிதமாக அதிகரித்து இருப்பது, உணவுப் பணவீக்கம் 10.01 சதவிகிதமாக அதிகரித்து இருப்பது, தொழில் துறை உற்பத்தி -3.8 சதவிகிதமாக சரிந்து இருப்பது போல பல சிக்கல்களை எதிர் கொண்டு வருகிறது.
அதோடு இந்தியப் பொருளாதாரத்தின் செப்டம்பர் 2019 காலாண்டில் ஜிடிபி 4.5 சதவிகிதமாக வளர்ச்சி சரிந்து இருப்பதையும் மறக்க முடியாது.
தங்கம் கடத்தல் அதிகரிப்பு.. என்ன காரணம்..!

பத்திரிகையாளர்கள் சந்திப்பு
இந்த சூழலில், இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்திப்பில் பேசி இருக்கிறார். அதில் விவசாயிகள் தங்கள் தொழிலை விட்டு வெளியேறி இருப்பதைப் பற்றியும் சில தரவுகளைச் சொல்லி அதிர்ச்சி அளித்து இருக்கிறார்.

வேலை வாய்ப்பு தன்மை
2011 - 12 முதல் 2017-18 வரையான ஆறு ஆண்டு காலத்தில், இந்திய நாட்டில், வேலை வாய்ப்பின் தன்மையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக, மத்திய அரசுக்கு முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் சொல்லி இருக்கிறார்.

கேஷிவல் டூ சம்பளம்
நாட்டில் வழக்கமான சம்பளத் தொழிலாளர்களின் விகிதம் 5 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் கேஷுவல் தொழிலாளர்களின் விகிதம் அதே விகிதத்தில் குறைந்துள்ளதாகச் சொல்கிறார். அதாவது சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்து இருக்கிறதோ அதே அளவுக்கு கேஷுவல் ஊழியர்களின் (ஒப்பந்த ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள்...) எண்ணிக்கை குறைந்து இருக்கிறது எனச் சொல்கிறார் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்.

முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரம்
இப்படி சம்பளம் வாங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது, இந்தியாவில் பொருளாதாரம் அதிகம் முறைப்படுத்தப்பட்டு வருவதைப், அதாவது Organized Economy-ஆக இந்தியப் பொருளாதாரம் மாற்றம் கண்டு வருவதைப் பார்க்க முடிகிறது என்றும் சொல்லி இருக்கிறார் மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்.

நல்ல ஊதியம் கிடைக்கும் வேலைகள்
நகர் புற மற்றும் கிராம புறங்களில் Remunerative jobs என்று சொல்லப்படும், நல்ல ஊதியம் கிடைக்கும் வேலைகள் அதிகரித்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர். இந்திய கிராம புறங்களில் நல்ல ஊதியம் கிடைக்கும் வேலைகள் 3.3 % மற்றும் இந்திய நகர் புறங்களில் 1.4 % அதிகரித்துள்ளதாம்.

விவசாயம்
அதோடு மிக முக்கியமாக, கடந்த ஆறு ஆண்டுகளில், விவசாயத் துறையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களில் ஐந்து சதவிகிதத்தினர், விவசாய தொழிலை விட்டே வெளியே போய்விட்டார்களாம். இந்த ஐந்து சதவிகித விவசாய தொழிலாளர்களுக்கு இந்திய சேவைத் துறையும், இந்திய தொழில் துறையும் தான் அடைக்கலம் கொடுத்து இருக்கிறதாம்.

எதில் எவ்வளவு
2011 - 12 முதல் 2017 - 18 ஆண்டு காலத்தில், விவசாய தொழிலை விட்டு வெளியே வந்த ஐந்து சதவிகித விவசாய தொழிலாளர்களில் நான்கு சதவிகிதத்தினருக்கு இந்தியாவின் சேவைத் துறை அடைக்கலம் கொடுத்து இருக்கிறதாம். மீதமுள்ள ஒரு சதவிகிதத்தினருக்கு இந்திய தொழில் துறை ஏலவாய்ப்புகளைக் கொடுத்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் நம் தலைமைப் பொருளாதார ஆலோசாகர் கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன்.