ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 6 மாதத்திற்குப் பின்பு நடைபெறும் காரணத்தால் வர்த்தகச் சந்தையில் நிறுவனங்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கு ஏற்றார் போல் இன்று சிறு குறு நிறுவனங்களுக்கும், போக்குவரத்து துறைக்கும், ஈகாமர்ஸ் வர்த்தக நிறுவனங்களுக்கும் முக்கியமான சலுகையை அறிவித்து இத்துறைக்கான வளர்ச்சியின் வேகத்தைக் கூட்டியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் சேர்மன் பதவியை கைப்பற்றினார் ஈஷா அம்பானி.. விரைவில் அறிவிப்பு..!

ஜிஎஸ்டி கவுன்சில்
ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பின் 47வது கூட்டம் ஜூன் 28 -29ஆம் தேதிகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், நிதியமைச்சர்கள் முன்னிலையில் நடந்து வருகிறது.

முக்கியக் கூட்டம்
இந்த முக்கியமான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சில புதன்கிழமை காலையில் வெளியானது. இதன் படி இரு முக்கியமான துறைக்கு ஜிஎஸ்டி கவுன்சில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

ரிஜிஸ்ட்ரேஷன்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வெளியான அறிவிப்பின் படி வருடத்திற்குச் சரக்குப் பிரிவில் 40 லட்சம் ரூபாயும், சேவை பிரிவில் 20 லட்சம் ரூபாய் அளவிலான விற்றுமுதல் அதாவது டர்ன்ஓவர் கொண்ட சிறு நிறுவனங்களுக்குக் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற கட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ளது.

ஈகாமர்ஸ்
இதேபோல் ஈகாமர்ஸ் தளத்தில் பொருட்களை விற்பனை செய்யும் சிறு நிறுவனங்களுக்குக் காம்போசிட் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் மூலம் 1.2 லட்சம் சிறு அளவிலான வரியை செலுத்தும் சிறு வர்த்தகர்கள் பலன் பெற உள்ளனர்.

போக்குவரத்துத் துறை
மேலும் போக்குவரத்து துறைக்குப் பலன் அளிக்கும் வகையில் கயிறு வழியாக (RopeWays) சரக்குகளை அனுப்பும் சேவைக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது மலை நகரங்களில் இருக்கும் மக்களுக்கும் பெரிய அளவில் பயன்படும்.

இன்புட் டாக்ஸ் கிரெடிட்
இதோடு சரக்கு போக்குவரத்து நிறுவனங்களுக்கு இன்புட் டாக்ஸ் கிரெடிட் இல்லாமல் 5 சதவீத வரி அல்லது ITC உடன் 12 சதவீத வரி ஆகிய இரு சேவையில் விருப்பமானவற்றைத் தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

வெளிநாட்டு டூர்
மேலும் வெளிநாட்டு டூர் திட்டங்களில் வெளிநாட்டு சேவைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி நீக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா துறையைப் பெரிய அளவில் மேம்படுத்தும். இதோடு சிறு நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ள கட்டாயப் பதிவு சேவையை ஜனவரி 2023ல் அமலாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.