இன்று முதலீட்டாளர்கள் மத்தியில் பரப்பரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் சென்செக்ஸ் தான். அது வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது தான்.
குறிப்பாக நேற்றைய முடிவு விலையிலிருந்து, இன்றைய குறைந்தபட்ச விலையுடன் ஒப்பிடும்போது சுமார் 3,200 புள்ளிகள் சரிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் சரிந்து 32,778 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 868 புள்ளிகள் சரிந்து 9,590 ஆக முடிவடைந்துள்ளது.
சொல்லப்போனால் இன்று மட்டும் முதலீட்டாளர்களின் 11.27 லட்சம் கோடி ரூபாயினை இன்றைய சந்தை எடுத்துக் கொண்டுள்ளது. சரி இப்படி படு பாதாளத்திற்கே சென்றுள்ளதே என்ன காரணம்? ஏன் இந்த படு வீழ்ச்சி? வாருங்கள் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் ஒரு பெரும் தொற்று நோய்
உலகச் சுகாதார அமைப்பு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸினை பெரும் தொற்று நோய் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக உலக சந்தைகள் மட்டும் அல்ல இந்தியா சந்தைகளும் இன்று படு வீழ்ச்சி கண்டுள்ளன. மேலும் தொற்று நோய் என்பது லேசாக அல்லது கவனக்குறைவாக பயன்படுத்துவதற்கான ஒரு சொல் அல்ல என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

பயணக்கட்டுப்பாடு
உலகச் சுகாதார அமைப்பு இப்படி ஒரு அறிவிப்பினை அறிவித்திருக்கும் இந்த நிலையில், அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தையும் ரத்து செய்துள்ளது. அது லண்டன் தவிர அடுத்த 30 நாட்களுக்கு இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகளையும் பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவும் கட்டுப்பாடு விதித்துள்ளது?
இந்தியாவும் சில நாடுகள் தவிர பெரும்பாலான நாடுகளுக்களுக்கான விசாக்களையும் ரத்து செய்துள்ளது. இது ஏப்ரல் 15 வரையில் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 70-க்கும் மேற்பட்டோர் கொரோணாவால் தாக்கம் அடைந்துள்ள நிலையில், மத்திய அரசானது இப்படி ஒரு நடவடிக்கையினை எடுத்துள்ளது.

அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் இது ஒரு பயத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயத்தினால் இந்திய சந்தைகளில் செய்த முதலீடுகளை வெளியே எடுக்க தூண்டியுள்ளது. இது மார்ச் மாதத்தில் மட்டும் உள்நாட்டு சந்தையில் இருந்து 20,831 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளது. அதிலும் பிப்ரவரி 24 முதல் எஃப்ஐஐ-க்கள் ஒவ்வொரு நாளும் நிகர விற்பனையாளர்களாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக இது உள்நாட்டு சந்தையில் பெரும் அழுத்தத்தினை கொடுக்கின்றன. இதுவே வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.

பத்திர சந்தை
இந்திய ரிசர்வ் வங்கியின் சில சாதகமற்ற முன்மொழிவுகளின் காரணமாக பத்திர சந்தையில், முதலீட்டாளர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை தூண்டிவிட்டது. யெஸ் பேங்கினை மறுசீரமைப்பதற்கான வரைவு திட்டத்தில், வங்கி கட்டுப்பாட்டாளர் கூடுதல் அடுக்கு 1 பத்திரங்களுக்கு முன்மொழிந்துள்ளார். இதனால் பல மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கி தனது திட்டங்களுடன் சென்றால், மியூச்சுவல் பண்ட் சந்தை வீழ்ச்சியடையக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

சர்வதேச சந்தைகள் சரிவு
கொரோனா பயத்தின் காரணமாக சர்வதேச சந்தைகள் படு வீழ்ச்சி கண்டு வருகின்றன. குறிப்பாக ஜப்பானின் நிக்கி 5.3% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போல் டவ் ஜோன்ஸ் 1,464.94 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு (5.86%) 23,553.22 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போல் S&P 500 குறியீடு 140.85 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு (4.89%) 2,741.38 ஆகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. நாஸ்டாக் காம்போசைட் 392.20 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 7,952.05 ஆகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போல ஐரோப்பிய சந்தைகளும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இப்படி பல்வேறு காரணங்களால் தான் சென்செக்ஸ் வரலாறு காணாத அளவு சரிவு கண்டுள்ளது.