வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை அறிவிப்புகள் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய காரணத்தால் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 588 புள்ளிகள் சரிந்து 46,285.77 புள்ளிகளை அடைந்துள்ளது. இந்தச் சரிவின் மூலம் முதலீட்டாளர்கள் கிட்டதட்ட 2 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.
இந்நிலையில் இன்று பட்ஜெட் அறிவிப்புகளும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் மூலம் இன்று காலை முதல் மும்பை பங்குச்சந்தையில் முதலீடுகள் குவிந்த வண்ணமாக இருந்தது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 48,764.40 புள்ளிகள் வரையில் உயர்ந்த நிலையில், வர்த்தக முடிவில் 2,314.84 புள்ளிகள் உயர்வில் 48,600.61 புள்ளிகளை அடைந்தது. இதன் மூலம் இன்று ஒருநாளில் மட்டும் சென்செக்ஸ் சுமார் 5 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
இதேபோல் நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தகம் முடியும் வரையில் தொடர்ந்து உயர்விலேயே இருந்த நிலையில் நிஃப்டி 696.50 புள்ளிகள் உயர்ந்து 14,331.10 புள்ளிகளை அடைந்துள்ளது.
இதன் வாயிலாக இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் இந்தியச் சந்தையின் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 5.2 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 20ஆம் தேதி சென்செக்ஸ் குறியீடு 49,792 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை வரையில் வர்த்தகம் தொடர் சரிவில் 46,285 புள்ளிகளுக்கு முடிவடைந்துள்ளது.
இதனால் கடந்த 6 வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 3507 புள்ளிகள் சரிந்தது. ஆனால் இன்றைய வர்த்தகத்தில் 6 நாள் தொடர் சரிவில் இருந்து மீண்டுள்ளது.