செவ்வாய்க்கிழமை மாலை மத்திய நிதியமைச்சகம் ரிசர்வ் வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க லட்சுமி விலாஸ் வங்கி மீது moratorium கட்டுப்பாடுகளை விதித்தது. இதோடு இவ்வங்கி வாடிக்கையாளர்கள் 25,000 ரூபாய் மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்தது.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களின் பயத்தின் காரணமாகக் கணக்கில் இருக்கும் பணத்தை முடிந்த வரையில் திரும்பப் பெற்று வருகின்றனர்.
இதன் வாயிலாக இன்று ஒரு நாள் மட்டும் லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியிலும், டிஜிட்டல் பேமெண்ட் வாயிலாகவும் சுமார் 10 கோடி ரூபாய் பணத்தை வெளியில் எடுத்துள்ளனர்.

டிஎன் மனோகரன்
லட்சுமி விலாஸ் வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கனரா வங்கியின் தலைவர் டிஎன் மனோகரன் கூறுகையில், வங்கியின் நிதிநிலை குறித்து ஏற்கனவே ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் மனநிலை பக்குவமாகவே உள்ளது.

தொழில்நுட்பம்
மத்திய நிதியமைச்சகம் 25,000 ரூபாய் வரையிலான பணப் பரிவர்த்தனைக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ள நிலையில், பல வங்கி கிளைகளில் இந்தக் கட்டுப்பாடுகளைத் தொழில்நுட்ப வாயிலாகவே செய்ய வேண்டியுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் நாடு முழுவதும் இருக்கும் வங்கி கிளைகள், ஏடிஎம்கள் மற்றும் இதர பணப் பரிவர்த்தனை தளங்களில் தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என டிஎன் மனோகரன் தெரிவித்துள்ளார்.

பணப் பற்றாக்குறை
மத்திய நிதியமைச்சகம் முன் அறிவிப்பு இல்லாமல் லட்சுமி விலாஸ் வங்கி மீது moratorium கட்டுப்பாடுகளை விதித்த காரணத்தால் பல வங்கி கிளைகளில் வாடிக்கையாளர்களுக்குக் கோரும் பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் போதுமான நிதி இல்லாமல் உள்ளது.
இதனால் வங்கி கிளைகள் மற்ற கிளைகளில் இருந்தும், currency chestஐ அணுகியும் பணத்தைப் பெற்று வருகிறார்கள்.

நம்பிக்கை
டிஎன் மனோகரன் லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகப் பணிக்கு வந்த முழுமையாக ஒரு நாள் கூட முடியாத நிலையிலும், வாடிக்கையாளர்கள் கோரும் பணத்தைக் கொடுக்கப் போதுமான நிதி வங்கியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.

10,000 கோடி ரூபாய்
மத்திய நிதியமைச்சகம் கட்டுப்பாடு விதித்த அடுத்த சில மணிநேரத்தில் லட்சுமி விலாஸ் வங்கியைக் காப்பாற்ற DBS வங்கியுடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்தது. ஆயினும் லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அடிப்படை பயத்தின் காரணமாகத் தங்களது கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துள்ளனர்.
இதனால் ஒரு நாளில் LVB வங்கி சுமார் 10 கோடி ரூபாய் அளவிலான வாடிக்கையாளர் பணத்தை இழந்துள்ளது.