லட்சுமி விலாஸ் வங்கி மீது மத்திய நிதியமைச்சகம் moratorium கட்டுப்பாடுகள் விதித்த அடுத்த ஒரு மணிநேரத்தில் ரிசர்வ் வங்கி புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இப்புதிய திட்டத்தின் படி நிர்வாகம் பிரச்சனையாலும், நிதி நெருக்கடியாலும் மோசமான நிலையில் இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கியை DBS வங்கியுடன் இணைக்கத் திட்ட வடிவத்தை வெளியிட்டுள்ளது.
ஒரு மாத moratorium கட்டுப்பாடுகள் கீழ் லட்சுமி விலாஸ் வங்கி 25,000 ரூபாய்க்கும் அதிகமாகத் தொகைக்குப் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதால், இவ்வங்கியின் வாடிக்கையாளர்களும் முதலீட்டாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய வர்த்தக இணைப்பு வரைவு மக்களின் மத்தியில் இருந்த பீதியை குறைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ரூ.25,000 மட்டுமே கிடைக்கும்.. லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.! #LVB

DBS வங்கி
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிக்கையின், நிர்வாகப் பிரச்சனையில் மூழ்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கி DBS பேங்க் இந்தியா உடன் இணைக்கப்படுவதன் மூலம் இக்கூட்டணி நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிக்காகச் சுமார் 2,500 கோடி ரூபாய் அளவிலான மூலதன நிதியை DBS வங்கி கொண்டு வரும் எனத் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் DBS பேங்க் லிமிடெட் -ன் இந்திய கிளை நிறுவனம் தான் இந்த BS பேங்க் இந்தியா.

வலிமையான நிதி நிலைமை
DBS பேங்க் இந்தியாவின் நிதி நிலைமை மிகவும் வலிமையாக உள்ளது. இந்த வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கி இணைப்பதன் மூலம் இருதரப்புக்கும் பெரிய அளவிலான வர்த்தக லாபம் கிடைக்கும்.
ஜூன்30, 2020 அறிக்கையின் படி DBS பேங்க் இந்தியாவின் மூலதனம் 7,109 கோடி ரூபாய், இதேபோல் இவ்வங்கியின் நகர வராக்கடன் அளவு 2.7 சதவீதம், நெட் வராக்கடன் அளவு 0.5 சதவீதம். இதேபோல் Capital to Risk அளவீடு 15.99% மட்டுமே என்பதன் காரணமாகவே ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கியுடன் இணைக்கப் பரிந்துரை செய்துள்ளது.

ஒப்புதல்
ரிசர்வ் வங்கி தற்போது இரு வங்கிகளுக்கும் இணைப்பதற்கான பரிந்துரையைத் தத்தம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் இரு வங்கிகளும் தங்களது விருப்பம் மற்றும் எதிர்ப்புகளை ரிசர்வ் வங்கிக்குத் தெரிவிக்கும்.
இரு வங்கிகளும் தனது முடிவை நவம்பர் 20ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.

397 கோடி ரூபாய் நஷ்டம்
செப்டம்பர் காலாண்டில் லட்சுமி விலாஸ் வங்கி தனது வர்த்தகத்தில் 397 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது மட்டும் அல்லாமல் வராக்கடன் அளவில் அதிகளவில் வளர்ச்சி அடைந்தது. இதுமட்டும் அல்லாமல் இவ்வங்கியின் நிர்வாகக் குழுவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை பெரிய அளவில் வெடித்துள்ளது.

யெஸ் வங்கி
இதேபோன்று தான் மார்ச் 5, 2020ல் ரிசர்வ் வங்கியின் கோரிக்கையின் அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் யெஸ் வங்கி மீது moratorium கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டது. இதன்பின் ரிசர்வ் வங்கியின் திட்ட வரைவு படி யெஸ் வங்கியைக் காப்பாற்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா களத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது லட்சுமி விலாஸ் வங்கியைக் காப்பாற்ற DBS வங்கிக்கு ரிசர்வ் வங்கி வாய்ப்பு அளித்துள்ளது இதை இரு வங்கிகளும் ஏற்குமா..?

கிளிக்ஸ் கேப்பிடல்
லட்சுமி விலாஸ் வங்கியின் வர்த்தக வளர்ச்சிக்காகவும், வாடிக்கையாளர் எண்ணிக்கை வளர்ச்சிக்காகவும் ஏற்கனவே கிளிக்ஸ் கேப்பிடல் நிறுவனத்துடன் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதல் அடைந்து இரு தரப்பு மத்தியிலும் முதற்கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியை DBS வங்கி உடன் சேர்க்கப் பரிந்துரை செய்துள்ளது.

கூட்டணி ஒப்பந்தம் உடையும்
லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் கொரோனா காரணமாகவும் கிளிக்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் கூட்டணி முயற்சி தாமதம் ஆனது, இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு கிளிக்ஸ் கேப்பிடல் நிறுவனம், லட்சுமி விலாஸ் வங்கி கூட்டணி தொடர்பான பணிகளைத் தொடர்ந்து தாமதம் செய்தால் கூட்டணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விலகுவதாகக் கிளிக்ஸ் கேப்பிடல் எச்சரித்தது.
இந்நிலையில் தற்போது மத்திய நிதியமைச்சகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள காரணத்தால் இக்கூட்டணி ஒப்பந்தம் வெற்றி அடையும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது.

moratorium கட்டுப்பாடுகள்
இன்று மாலை மத்திய நிதியமைச்சகம் பல்வேறு நிர்வாகம் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு நவம்பர் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரையில் moratorium கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

டெபாசிட் செய்தவர்களின் நிலை
இந்தத் தடை காலத்தில் இவ்வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு 25,000 ரூபாய்க்கு அதிகமாகத் தொகையைக் கொடுக்கக் கூடாது, அப்படிக் கொடுக்க வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து எழுத்துப்பூரவ ஒப்புதல் பெற வேண்டும்.
மேலும் அவசர காரணங்களுக்காகவும், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அதாவது குடும்பப் பிரச்சனை, மருத்துவச் செலவுகள், கல்வி கட்டணம் ஆகியவற்றுக்காக நிதி தேவை இருக்கும் பட்சத்தில் டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு 25,000 ரூபாய்க்கு அதிகமாகத் தொகையைக் கொடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி கொடுக்கிறது.

கடன் வழங்குவதிலும் கட்டுப்பாடு
இதேபோல் வங்கி 25,000 ரூபாய்க்கு மேல் யாருக்கும் கடன் அளிக்கக் கூடாது. இப்படிக் கடன் கொடுக்க வேண்டுமென்றால் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.