18 பெரிய டாடா குழும நிறுவனங்களின் சந்தை மூலதனம் முதல் முறையாக 200 பில்லியன் டாலர்களுக்கு அருகில் நெருங்கியுள்ளது.
நவம்பர் 27 முடிவு விலையின் படி, டாடா குழுமத்தின் 18 டாடா நிறுவனங்களின் சந்தை மூலதனமானது 14,50,502 கோடி ரூபாயாக ($196.11 பில்லியன்) அதிகரித்துள்ளது.
இதே நேரம் வங்கி மற்றும் நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி குழுமம் இந்த பந்தயத்தில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. ஹெச்டிஎஃப்சி குழுமத்தின் நான்கு நிறுவனங்களின் சந்தை மூலதனம் 13,84,118 கோடி ரூபாயாக ($187.14 பில்லியன் ) அதிகரித்துள்ளது. இதற்கிடையில் ஹெச்டிஎஃப்சி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு வேகமாக அதிகரிக்கும் என்றும் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்தில் 200 பில்லியன் டாலர் சந்தை மதிப்பினை எட்டிய முதல் நிறுவனமாகும். எனினும் இந்த உச்சத்தினை தொட்டத்தில் இருந்து கிட்டதட்ட 17 சதவீதம் சரிந்துள்ளது. ரிலையன்ஸ் மற்றும் அதன் பட்டியலிடப்பட்ட துணை நிறுவனங்களின் மதிப்பு கூட்டாக சந்தையில் 12,38,467 கோடி ரூபாயினை ($167.45 பில்லியன்) கண்டுள்ளது. இதே புரோமோட்டார் ஹோல்டிங்கின் மொத்த மதிப்பு 6,28,819 கோடி ரூபாயாகும் ($85 பில்லியன்). இது டாடா குழுமத்துடன் ஒப்பிடும்போது 32 சதவீதம் குறைவாகும்.

சொத்து மதிப்பில் முக்கிய பங்கு
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் ரிலையன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிதியாண்டில் ரிலையன்ஸின் சந்தை மதிப்பு கிட்டதட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸின் சில்லறை வர்த்தகத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளதே காரணம்.

அதானியின் மதிப்பு எவ்வளவு?
சமீபத்திய காலத்தில் சற்று வேகமாக வளர்ந்து வரும் மற்றொரு இந்திய நிறுவனம் அதானி. குறிப்பாக அதானி கீரின் எனர்ஜியின் பங்கு விலை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் 600 சதவீதத்திற்கு மேலாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் அதானி கேஸின் பங்கு விலையானது 300 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதானி குழுமத்தின் ஆறு பெரிய நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் 3,97,459 கோடி ரூபாயினை எட்டியுள்ளது. இதில் புரோமோட்டர்களின் ஹோல்டிங் மதிப்பு 2,88,303 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

பஜாஜ் குழுமம் எப்படி?
இருப்பினும் அதானியை விட பஜாஜ் குழுமம் முன்னிலையில் உள்ளது. மூத்த தொழிலதிபரான ராகுல் பஜாஜ் தலைமையிலான பஜாஜ் குழுமத்தின் முதல் ஆறு நிறுவனங்கள் மொத்தமாக 5,67,923 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பஜாஜின் நிதி வணிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மீண்டு வந்து கொண்டுள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் இதன் பங்கு விலையானது உச்சத்தினை தொட்டு வருகின்றது. இந்த குழுமத்தில் புரோமோட்டர்களின் ஹோல்டிங் மதிப்பு 3,21,486 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அதானியை விட அதிகமாகும்.

ஹெச்யுஎல் & இன்ஃபோசிஸ்
இதே எஃப் எம் சி ஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 5,02,147 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4,68,779 கோடி ரூபாயாக உள்ளது.டாடா குழுவில் டிசிஎஸ் மற்றும் டைட்டன் நிறுவனம் தவிர, மற்ற நிறுவனங்கள் சமீப காலங்களில் முதலீட்டாளர்கள் அவ்வப்போது வெளியேறுவதை எதிர்கொண்டுள்ளது. இருப்பும் தலைவர் என் சந்திரசேகரனின் சொத்து மேம்படுத்துதல் உத்தி மற்றும் அவரது கடன் குறைப்பு திட்டங்களுடன் நிலைமை தற்போது மாறி வருகின்றது.

டிசிஎஸ் தான் டாப்
டாடா குழுமத்தில் உள்ள நிறுவனங்களில் அதிக சந்தை மூலதனம் கொண்ட நிறுவனம் டிசிஎஸ் தான். இதன் சந்தை மூலதனம் 10,05,320 கோடி ரூபாயாகும். இதே டைட்டனின் சந்தை மூலதனம் 1,20,548 கோடி ரூபாயாகும். இதே டாடா ஸ்டீலின் சந்தை மூலதனம் 66,215 கோடி ரூபாயாகும். இதே டாடா மோட்டார்ஸின் சந்தை மூலதனம் 55,679 கோடி ரூபாயாகும். இதே டாடா நுகர்வோர் 49,672 கோடி ரூபாயும், டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், வோடாஸ் நிறுவனம், டிரெண்ட் மற்றும் டாடா பவர் ஆகியவையும் சற்று பங்களிப்பு வகிக்கின்றன.