இந்தியாவின் மிகப்பெரிய வணிக ராஜ்ஜியமான டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த மார்ச் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.
மார்ச் காலாண்டில் இந்த நிறுவனம் 1032.8 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் இதன் நஷ்டம் 1516.14 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே மார்ச் காலாண்டில் 7605.40 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக மார்ச் காலாண்டில் நஷ்டத்தினை கண்டிருந்தாலும், கடந்த ஆண்டினை, கடந்த காலாண்டினை காட்டிலும் நஷ்டம் குறைந்துள்ளது. இது நிறுவனம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது.
ஜகா வாங்கிய சோமேட்டோ.. 10 நிமிட டெலிவரி சேவை என்ன ஆச்சு..?

வருவாய் சரிவு
இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 11.5 சதவீதம் குறைந்து, 78,439 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 88,627.90 கோடி ரூபாயாக இருந்தது என இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எபிட்டா விகிதம்
இதன் எபிட்டா மார்ஜின் விகிதமானது 11.2 சதவீதம் குறைந்து, 320 அடிப்படை புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு பிரச்சனைக்கள் இருந்து வந்தபோதிலும், தேவையானது வலுவாக இருந்து வந்தது. ஆனால் பல்வேறு அரசியல் பதற்றங்கள், பணவீக்கம், விலைவாசி உயர்வு என பல காரணிகளுக்கு மத்தியில் சப்ளையானது பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வாகன உதிரி பாகங்களுக்கு பற்றாக்குறையே நிலவி வருகின்றது. இதன் காரணமாக விலைவாசியும் அதிகரித்துள்ளது. இது உற்பத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு, உற்பத்தி விலையினையும் அதிகரித்துள்ளது.

சிப் பற்றாக்குறை
குறிப்பாக சீனாவில் நிலவி வரும் கொரோனா சூழல் காரணமாக அங்கு கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிப் பற்றாக்குறையானது அதிகரித்துள்ளது. எப்படியிருப்பினும் நடப்பு ஆண்டில் வலுவான வளர்ச்சியினை காண்போம் என டாடா மோட்டார் தெரிவித்துள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவரின் வருவாய்
சொகுசு கார் பிராண்டான ஜாகுவார் லேண்ட் ரோவரின் வருவாய் விகிதமானது 4.8 பில்லியன் யூரோவாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 27 சதவீதம் அதிகமாகும்.
எப்படியிருப்பினும் தொடர்ந்து நிறுவனம் வளர்ச்சியினை மீட்டு வருகின்றது. குறிப்பாக அதன் கனரக வர்த்தக வாகனங்கள் பிரிவில் நல்ல வளர்ச்சி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் மூலதன் பொருட்கள் பற்றாக்குறை, பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளினால் செலவினங்கள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மார்ஜின் விகிதம் பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பங்கு விலை நிலவரம்?
கடந்த அமர்வில் பங்கு விலையானது பலத்த சரிவினைக் கண்டிருந்த நி;லையில், இன்று என் எஸ் --யில் டாடா மோட்டார்ஸ்-ன் பங்கு விலையானது 9.54% (12.57 மணி நிலவரப்படி) அதிகரித்து. 407.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்சம் இதுவரையில் 419.35 ரூபாயாகும். இதே குறைந்தபட்ச விலை 387 ரூபாயாகும்.இதே இதன் 52 வார உச்சவிலை 536.70 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 268.45 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-ல் இப்பங்கு விலையானது 9.78% (12.59 மணி நிலவரப்படி) அதிகரித்து. 408.75 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்சம் இதுவரையில் 415.75 ரூபாயாகும். இதே குறைந்தபட்ச விலை 386.30 ரூபாயாகும்.இதே இதன் 52 வார உச்சவிலை 536.50 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 268.50 ரூபாயாகும்.
டாடா மோட்டார்ஸின் இந்த வளர்ச்சி விகிதமானது அதன் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக அதிகரியான மார்க் லிஸ்டோசெல்லாவின் வருகைக்கு பின்னர் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.