இந்தியாவின் முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமம் தொடர்ந்து பல துறையில் புதிதாக வர்த்தகம் துவங்கி வரும் நிலையில் இந்தியாவில் முக்கியப் பிரச்சனையாக இருக்கும் செமிகண்டக்டர் துறையில் இறங்குவது குறித்து டாடா சன்ஸ் தலைவர் உறுதி செய்துள்ளார்.
அனைத்து கருவிகளிலும் செமிகண்டக்டர் சிப் என்பது அடிப்படையாக மாறி வரும் நிலையில், செமிகண்டக்டர்-க்கான தட்டுப்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. மேலும் உலக நாடுகள் செமிகண்டக்டர் சிப்-க்காக அதிகம் சீனா-வை மட்டுமே நம்பியிருக்கும் நிலை அனைத்து நாடுகளுக்கும் முக்கியப் பிரச்சனையாக உள்ளது.
இந்த நிலையை மாற்றும் விதமாக டாடா குழுமம் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளது.

டாடா குழுமம்
டாடா குழுமம் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே சொந்தமாகச் செமிகண்டக்டர் சிப் உற்பத்தியைத் தொடங்கும் என்று டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் வியாழன் அன்று Nikkei Asia க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

டாடா எலக்ட்ரானிக்ஸ்
டாடா குழுமம் குழு ஏற்கனவே டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளது. இந்த நிறுவனம் ஸ்மார்ட்போன் உதிரிப்பாகங்கள் முதல் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரிக்க உள்ளது. ஒசூரில் பிரம்மாண்டமான தொழிற்சாலையை அமைத்துள்ளது.

செமிகண்டக்டர் அசெம்பிளி டெஸ்டிங்
இந்த நிலையில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கீழ் செமிகண்டக்டர் அசெம்பிளி டெஸ்டிங் வர்த்தகத்தை விரைவில் அமைக்கப்பட உள்ளது என டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

என். சந்திரசேகரன்
நாங்கள் பல செமிகண்டக்டர் நிறுவனங்கள் உடன் கலந்துரையாடி வருகிறோம் எனக் கூறிய சந்திரசேகரன், தற்போதுள்ள சிப் உற்பத்தியாளர்களுடன் கூட்டாணியை உருவாக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

கூட்டணி
செமிகண்டக்டர் சிப் தயாரிப்புத் துறையில் அனுபவமற்ற நிறுவனம் சொந்தமாகச் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பது என்பது மிகவும் சவாலானது, இதனால் கூட்டணி முயற்சியில் இத்துறையில் இறங்க உள்ளதாக அறிவித்தார்.

முக்கியமான முடிவு
கோவிட் தொற்று பாதிப்பிலும், இடையூறுகளிலும் இருந்து இன்னும் முழுமையாக மீளாத உலகளாவிய சிப் சப்ளை செயினில் இந்தியாவை ஒரு முக்கிய அங்கமாக மாற்றும் முயற்சியில் செமிகண்டக்டர் உற்பத்தியில் நுழைய டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள்
டாடா குழுமம் கடந்த 5 வருடத்தில் பல முக்கிய முதலீடுகளையும், வர்த்தக திட்டத்திலும் இறங்கியுள்ளது. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்கள் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் புதிய வர்த்தகத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் டாடா குழுமத்தின் தலைவர் கூறினார்.

2 நிறுவனம்
இந்தியாவில் ஏற்கனவே இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனமும், பாக்ஸ்கான் நிறுவனமும் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்புக்காகப் பெரும் தொகையை முதலீடு செய்யவும், கூட்டணி அமைக்கவும் முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.

ISMC ANALOG நிறுவனம்
செமிகண்டக்டர் சிப் தயாரிக்க இஸ்ரேல் நாட்டின் டவர் செமிகண்டக்டர் மற்றும் மும்பையின் நெக்ஸ்ட் ஆர்பிட் வென்சர் கூட்டணியில் ISMC ANALOG இந்தியாவில் பெரும் தொகை முதலீட்டில் பெங்களூரில் பெரும் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. ISMC ANALOG நிறுவனத்தில் ஹெச்சிஎல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலா 30 சதவீத பங்குகளைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.

வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான்
வேதாந்தா குழுமம் குஜராத்தில் நாட்டின் முதல் செமிகண்டக்டர் சிப் மற்றும் டிஸ்ப்ளே கிளாஸ் ஆலையைச் சுமார் ரூ.1.54 லட்சம் கோடி முதலீட்டில் அமைக்க உள்ளது. இந்தத் தொழிற்சாலையை அனில் அகர்வாலின் வேதாந்தா மற்றும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இணைத்து குஜராத் மாநிலத்தில் அமைக்க உள்ளது.