ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4வது காலாண்டு முடிந்த நிலையில், சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் தினமும் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளன.
இன்று ஐடிபிஐ வங்கி, எச்டிஎப்சி, அதானி வில்மர், ஐநாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியவை என்ன என்பதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

நிகர லாபம்
ஐடிபிஐ வங்கி நிகர லாபம் 4வது காலாண்டில் 35 சதவீதம் அதிகரித்து 691 கோடி ரூபாய் பெற்றுள்ளது. 2021-ம் ஆண்டு 4வது காலாண்டில் 512 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்று இருந்தது. ஆனால் நிகர வருவாய் 3,240 கோடி ரூபாயிலிருந்து இந்த ஆண்டு 2,420 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.

திரும்ப வராமல் இருக்கும் கடன்கள்
Noon-performing assets என அழைக்கப்படும் வங்கியின் செயற்படாத சொத்துக்கள், அதாவது கடன் வழங்கப்பட்டுத் திருப்பி அடைக்கப்படாமல் இருக்கும் சொத்துக்களின் பட்டியல் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 22.37 சதவீதத்திலிருந்து 19.14 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ஐடிபிஐ வங்கி குறைத்துள்ளது.

பங்கு நிலவரம்
இன்றைய சந்தை நேர முடிவில் ஐடிபிஐ வங்கி பங்குகள் 0.33 சதவீதம் என 0.15 புள்ளிகள் அதிகரித்து 45.50 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. லாபம் அதிகரித்து, வாரா கடன் குறைந்துள்ளதால் நாளை இந்த பங்கு கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

எச்டிஎப்சி
இந்தியாவின் மிகப் பெரிய வங்கி அல்லாத நிதி நிறுவனமான எச்டிஎப்சி 4வது காலாண்டில் 3,700 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்துள்ளது. சென்ற ஆண்டு இதுவே 3,180 கோடி ரூபாயாக இருந்தது.

வாரா கடன்
தனிநபருக்கு அளித்த வாரா கடன் 0.99 சதவீதமாகவும், தனிநபர் அல்லாதவர்களுக்கு அளித்த வாரா கடன் 4.76 சதவீதமாக உள்ளது என எச்டிஎப்சி தெரிவித்துள்ளது.

டிவிடண்ட்
எச்டிஎப்சி தங்களது முதலீட்டாளர்கள் 2022 நிதியாண்டுக்குப் பங்கு ஒன்றுக்கு 30 ரூபாய் டிவிடண்ட் அளிப்பதாக அறிவித்துள்ளது. இன்றைய சந்தை நேர முடிவில் எச்டிஎப்சி பங்குகளின் மதிப்பு 34.55 புள்ளிகள் என 1.55 சதவீதம் உயர்ந்து 2,262.70 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.

பிரிட்டானியா
பிஸ்கேட் நிறுவனமான பிரிட்டானியாவின் லாபம் 4வது காலாண்டில் 4 சதவீதம் அதிகரித்து 379.87 கோடி ரூபாயாக உள்ளது. இது சென்ற அண்டு 364.32 கோடி ரூபாயாக இருந்தது.

டிவிடண்ட்
பிரிட்டானியா பங்குகள் வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு 56.50 ரூபாய் வழங்க போர்டு குழு பரிந்துரைத்துள்ளது. திங்கட்கிழமை சந்தை நேர முடிவில் பிரிட்டானியா பங்குகள் 18.60 புள்ளிகள் என 0.57 சதவீதம் சரிந்து 3,264.60 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

அதானி வில்மர்
அதனி வில்மர் பங்குகள் விலை 4வது காலாண்டில் 26 சதவீதம் சரிந்து 234 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்துள்ளது. சந்தை நேர முடிவில் அதானி விலமர் பங்குகள் 3.7 சதவீதம் சரிந்து 751.50 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

ஐநாக்ஸ்
திரையரங்கு நிறுவனமான ஐநாக்ஸ் லீசியர், திங்கட்கிழமை வெளியிட்ட 4வது காலாண்டு முடிவில் 28.17 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளது. சென்ற ஆண்டு 93.69 கோடி ரூபாய் நட்டம் அடைந்திருந்தது ஐநாக்ஸ். மார்ச் மாதம் இறுதியில் ஆர்.ஆர்.ஆர், ராதே ஷாம் உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருந்தது கொஞ்சம் நட்டம் குறைந்ததற்குக் காரணமாக உள்ளது.
நடப்பு காலாண்டில் ஏப்ரல் மாதம் பீஸ்ட், கேஜிஎப் 2 உள்ளிட்ட படங்கள் திரையரங்கில் நல்ல வசூலை வழங்கியுள்ளன. மே மாதமும் ஜூன் மாதமும் இன்னும் நல்ல படங்கள் திரைக்கு வந்து வெற்றிபெற்றால் ஐநாக்ஸ் லாபத்திற்குத் திரும்ப அதிக வாய்ப்புகள் உள்ளது.