இந்தியா முழுவதும் அதிரடி கிளப்பிய கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்குத் தடை விதித்த பின்பு பல முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கி முடிவிற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுமட்டும் அல்லாமல் பட்ஜெட் அறிக்கையில் கூட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சி மீது வர்த்தகம் செய்யக் கூடாது. இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசு பொறுப்பில்லை எனவும் கூறினார்.
ஆனால் உண்மையில் ரிசர்வ் வங்கி விர்ச்சுவல் கரன்சி எனப்படும் கிரிப்டோகரன்சி குறித்து இவ்விதமான ஆய்வு செய்யாமலேயே இதன் வர்த்தகத்திற்குத் தடை விதித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

வருண் சேத்தி
ஸ்டார்ட்அப் கன்சல்டன்ட் ஆக இருக்கும் வருண் சேத்தி ஏப்ரல் 9ஆம் தேதி தகவல் அறியும் சட்டத்தின் கீழ், கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைத் தடை செய்யும் முன் அதுகுறித்து ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டதா என அவர் கேள்வி கேட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி பதில்
இதிற்குப் பதிலளித்த ரிசர்வ் வங்கி, ஏப்ரல் மாதத்தில் ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சி மீது தடை செய்யப்பட்ட போது எவ்விதமான ஆய்வு, ஆலோசனையும் செய்யலில்லை. மேலும் கிரிப்டோகரன்சி மற்றும் பிளாக்செயின் குறித்து ஆய்வு செய்ய எந்த ஒரு குழுவும் ரிசர்வ் வங்கி அமைக்கவில்லை எனக் கூறியுள்ளதாக வருண் சேத்தி தெரிவித்துள்ளார்.
இவர் பிளாக்செயின்லாயர்.இன் தளத்தின் நிறுவனர் ஆவார்.

தடை
ஏப்ரல் 6ஆம் தேதி வங்கிகள், ஈவேலெட், பேமென்ட் கேட்வே ஆகியவை விர்ச்சுவல் கரன்சி வர்த்தகத்திற்கு எவ்விதமான உதவியும், சேவையும் அளிக்கக் கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டது.

எக்ஸ்சேஞ்ச்
இதன் எதிரொலியாக வங்கிகள் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட சேவைகளை முழுமையாகத் தடை செய்தது. இதனை எதிர்த்து எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணை வருகிற ஜூலை 20ஆம் தேதி வருகிறது.

முற்றிலும் தவறு..
கிரிப்டோகரன்சி பற்றியும், பிளாக்செயின் தொழில்நுட்பம் பற்றியும் எவ்விதமான ஆய்வும், ஆலோசனையும் செய்யாமல் இதனால் ஏற்பட்டும் சாதகபாதகங்களைத் தெரிந்துகொள்ளாமலேயே தடையை விதித்துள்ளது முற்றிலும் தவறானது.

தடை நீடிக்குமா..?
ஜூலை 20ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்குப் பின்பு கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்களின் நிலை என்ன..? விர்ச்சுவல் கரன்சி வர்த்தகம் மீதான தடை தொடர்ந்து நீடிக்குமா ஆகியவை தெரியவரும்.