இந்தியாவின் முன்னணி இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனம் போலி ஜிஎஸ்டி ரசீது மோசடியில் சிக்கியுள்ளதை அடுத்து ஜிஎஸ்டி அமைப்பு இந்நிறுவனத்திற்கு 30 கோடி ரூபாய் அளவிலான தொகையை அபராதமாக விதித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் எல் அண்ட் டி, ஜீ எண்டர்டெயின்மென்ட் மற்றும் பல மும்பை நிறுவனங்களில் வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி துறை இன்புட் டாக்ஸ் கிரெடிட் அடிப்படையிலான போலி ரசீது மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி அமைப்பு நவம்பர் 2020 முதல் போலி ஜிஎஸ்டி ரசீது மோசடிகளைத் தடுக்கும் விதமாகப் பல அதிரடி நடவடிக்கை மற்றும் சோதனைகளைச் செய்துள்ளது. இதன் வாயிலாக ஜிஎஸ்டி மோசடியில் தொடர்புடைய 329 பேரைக் கைது செய்துள்ளது. 3,200க்கும் மேற்பட்ட வழக்குகள், 9,600 போலி GSTIN பதிவுகளை ரத்து செய்துள்ளது.
மேலும் இந்தச் சோதனைகள் மூலம் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 329 பேரில் 46 பேர் தலைவர்/நிர்வாகத் தலைவர்கள், 5 பேர் CEOs/CFOs/CMDs, 10 பேர் தணிக்கையாளர் ஆகியோரும் அடக்கம்.
இதேவேளையில் ஜிஎஸ்டி வரி வசூல் அளவீடு ஜனவரி மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1.20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியைப் பெற்றுள்ளது.